வெள்ளி, 16 செப்டம்பர், 2011

வெளியேற்றப்பட்ட தினக்குரல் பத்திரிகையாளர்கள்

கொழும்பில் இயங்கி வரும் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நேற்று புதன்கிழமை அவர்களின் கடமைகளுக்காக அலுவலகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.நிர்வாகத்தினரின் அறிவுறுத்தலின்படி அலுவலகத்துக்குச் சென்றவர்கள் முன் கேற்றடியில் வைத்து தடுக்கப்பட்டனர்.


நிர்வாகத்தினர் வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்த பத்திரிகையாளர்கள் "சட்டவிரோதமாக தாங்கள் பணியில் இருந்து தடுக்கப்பட்டிருப்பதாக'' கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.கடந்த ஜுலை முதலாம் திகதி முதல் தினக்குரல் பத்திரிகை " ஏசியன் மீடியா பப்ளிகேசன் பிரைவேட் லிமிட்டட்'' என்ற பெயரில் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.இக்காலப் பகுதியில் மேற்குறிப்பிட்ட நிறுவனமே தினக்குரல் ஊழியர்கள் அனைவருக்குமான சம்பளம் உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது.இதேசமயம் தினக்குரல் ஊழியர்கள் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தம்மீதான ராஜினாமா வற்புறுத்தல் குறித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாமை குறித்தும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து இது தொடர்பான விடயத்தில் விளக்கமளிக்க வருமாறு தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் விக்கிரமசிங்க ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் பி. கேசவராஜாவை அழைத்த போதிலும் நேற்று தனக்கு நேரம் இல்லை என்று மறுத்து விட்டார் என்று தெரியவருகிறது.இதனையடுத்து இந்தச் சந்திப்பு இன்று நடைபெறவிருக்கிறது. ஆனால் தினக்குரல் நிறுவனத்திலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனத்தினால் நியமன கடிதம் வழங்கப்படும் என்ற நிபந்தனையை வீரகேசரி நிறுவனம் விதித்திருக்கிறது.

ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிப்பதற்கு நேற்று புதன் கிழமை வரை காலக்கெடு விதித்திதிருந்த ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் 25 பத்திரிகையாளர்களும் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பிக்காததால் அவர்களை காரியாலயத்தினுள் நுழைய அனுமதிக்கவில்லை நிர்வாகத்தரப்பு என்று கூறுகிறது.அதேசமயம் செய்தி ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான பதவி வெற்றிட விண்ணப்ப அறிவித்தல்களை ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக