செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சோனியாவுடன் திடீர் சந்திப்பு சிதம்பரம் ராஜினாமாவா?


புதுடெல்லி : ஸ்பெக்ட்ரம் சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்தார். அப்போது, தனது பதவியை ராஜினாமா செய்ய ப.சிதம்பரம் முன்வந்ததாக தகவல்கள் வெளியாகி, டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவை சந்தித்து பேசினார்.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய கடந்த 2008ம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.



அவர் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலத்தில் விற்பனை செய்திருக்கலாம் என்று பிரதமருக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து கடந்த மார்ச்சில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் ஆர்வலர் ஒருவர் பெற்று அம்பலபடுத்தினார்.
இதையடுத்து, அமைச்சர் சிதம்பரத்தை பதவியில் இருந்து நீக்கும்படி பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரின. அப்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டார். இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை நியூயார்க்கில் நேற்றுமுன்தினம் சந்தித்த பிரணாப் முகர்ஜி, சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்த சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட்டு, இரு மூத்த அமைச்சர்கள் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் நேற்று ஈடுபட்டார். சோனியா காந்தியை சிதம்பரம் நேற்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, சிதம்பரத்தை சோனியா சமாதானப்படுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சிதம்பரம் முன்வந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, வெள்ள பாதிப்புகளை பார்வையிட ஒரிசாவுக்கு இன்று செல்லவிருந்த சிதம்பரம், தனது சுற்றுப்பயணத்தை நேற்றிரவு திடீரென ரத்து செய்துவிட்டார். இதனால், அவர் ராஜினாமா செய்வதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், காங்கிரஸ் வட்டாரங்கள் இதை உடனடியாக மறுத்தன. சிதம்பரம் சந்திப்புக்கு பின்னர், சோனியாவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்தார். அப்போது, சர்ச்சைக்குரிய கடிதம் பற்றிய தனது நிலையை பிரணாப் விளக்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக