செவ்வாய், 27 செப்டம்பர், 2011

அண்ணா 138; கருணாநிதி 183.காமராஜருக்கும் ராஜாஜிக்கும் கூடிய கூட்டத்தை



திமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்தல் 27 ஜூலை 1969 அன்று நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார் நாவலர் நெடுஞ்செழியன். அமைச்சரவையில் இடம்பெறாததால் கட்சிப் பணியில் முழுமையாகச் செயல்பட அந்தப் பதவி அவசியம் என்றார் நெடுஞ்செழியன்.
முதலமைச்சர் கருணாநிதி கருத்து எதையும் சொல்லாவிட்டாலும் அவருக்கு ஆதரவான காய் நகர்த்தல்கள் பலமாக நடந்துகொண்டிருந்தன. கட்சியின் பொதுச்செயலாளராக கருணாநிதிதான் வரவேண்டும்; அதுவும் போட்டி எதுவும் இல்லாமல் என்றார் எம்.ஜி.ஆர். அதன் அர்த்தம் நெடுஞ்செழியன் போட்டியிடுவதை அவர் விரும்பவில்லை. ஒருகட்டத்தில் தன்னுடைய கருத்தை பகிரங்கமாக அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

திமுகவில் 99 சதவீதம் பேர் கலைஞரே பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். தனக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தன்னுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாவலர் (நெடுஞ்செழியன்) சொல்வது அவர்களைக் கட்டாயப்படுத்துவதாகத்தான் ஆகும். கட்சியின் தலைமை ஒருவரிடமும் ஆட்சியின் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் சீர்குலைந்தது. அந்த நிலை திமுகவுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இரண்டு பதவிகளையும் ஒருவரே வகிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்.
கட்சிக்குள் என்ன மாதிரியான சூழல் இருக்கிறது என்பது எல்லோருக்குமே புரிந்துபோனது. முதலமைச்சர் கருணாநிதி பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவது என்று முடிவு செய்துவிட்டார். நெடுஞ்செழியனும் விடாப்பிடியாக இருந்ததால் நிலைமை சிக்கலாகிக்கொண்டே போனது. குழப்பங்கள் அதிகரித்தன. இதைச் சரிக்கட்டும் வகையில் திமுகவில் சட்டத்திட்டங்களில் ஒரு திருத்தம் கொண்டுவர முடிவானது. அவைத்தலைவர் என்ற பதவியைத் தலைவர் என்று மாற்றிக் கொள்ளலாம். பொதுச்செயலாளர் நிறைவேற்ற வேண்டிய பணிகளைத் தலைவருடன் கலந்துபேசி, இருவரும் சேர்ந்து முடிவெடுக்கலாம். இதனை திமுக பொதுக்குழு ஏற்றுக்கொண்டது. அதன்படி திமுக தலைவராக கருணாநிதி, பொதுச்செயலாளராக நெடுஞ்செழியன் இருவரும் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர் பொருளாளரானார்.
பேராசிரியர் க. அன்பழகன், கே.ஏ. மதியழகன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்ற கட்சியின் மூத்தவர்கள் பலர் இருந்தும் பொருளாளர் பதவியை ஏன் எம்.ஜி.ஆரிடம் கொடுக்க வேண்டும்? தான் முதலமைச்சராகவும் கட்சியின் தலைவராகவும் வருவதற்கு உதவியாக இருந்தார் என்பதற்காகவே பொருளாளர் பதவியை எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார் கருணாநிதி என்ற பேச்சு கட்சிக்குள் இருந்தது. பிறகு அந்தப் பேச்சு மெல்ல அடங்கியது. எனினும், எம்.ஜி.ஆரைத் திமுகவின் பொருளாளராக ஆக்கியதில் பெரியாருக்கு விருப்பம் இல்லை. ‘அய்யய்யோ, கலைஞர் எதிலேயோ காலை வைத்துவிட்டாரே’ என்று கருத்து தெரிவித்துள்ளார். கவிஞர் கருணானந்தம் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இந்தக் தகவல் இருக்கிறது.
பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதன்மூலம் கருணாநிதியுடன் கைகோத்துக்கொண்ட நெடுஞ்செழியன், அமைச்சரவையிலும் இணைந்து கொண்டார். அவருக்கு கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன. அமைச்சரவை மேலும் கொஞ்சம் விரிவுபடுத்தப்பட்டு என்.வி. நடராசன், கவிஞர் கா. வேழவேந்தன் இருவரும் அமைச்சரவையில் இணைந்தனர்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கவேண்டும் என்பது அண்ணா காலத்தில் இருந்தே திமுக வலியுறுத்திவரும் விஷயம். அதிகாரங்களைப் போலவே சில உரிமைகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. அதில் ஒன்று, தேசியக்கொடி ஏற்றும் உரிமை.
ஆகஸ்டு 15 அன்று சுதந்தர தினம் கொண்டாடப்படும்போது ஒவ்வொரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்திலும் மாநில ஆளுநர் தேசியக்கொடியை ஏற்றிவைப்பது வழக்கம். அந்த உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்குத் தரப்படவேண்டும் என்பது கருணாநிதி விருப்பம். முதலமைச்சரான பிறகு டெல்லி சென்ற அவர், அந்த உரிமையை வலியுறுத்தினார். அதற்கு முன்பே சில கடிதங்களையும் மத்திய அரசுக்கு எழுதியிருந்தார். எல்லாவற்றுக்கும் பலனாக 15 ஆகஸ்டு 1969 முதல் சுதந்தர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. (குடியரசுத் தினத்தன்று ஆளுநர் கொடி ஏற்றலாம்) சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் கருணாநிதி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
ஆட்சிப்பணி ஒருபக்கம் இருந்தபோதும் கட்சிப்பணியிலும் கவனம் செலுத்தினார் கருணாநிதி. குறிப்பாக, 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் திமுக மாவட்ட மாநாட்டைக் கூட்டினார். அண்ணா இல்லாமல் கூடிய முதல் திமுக மாநாடு அது. சி.பி. சிற்றரசு தலைமையில் கூடிய அந்த மாநாட்டைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர். அந்த மாநாட்டில்தான் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களைப் பட்டியலிட்டார் கருணாநிதி. அவை, அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி ஆகியன.
மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை இந்த மாநாட்டில் அறிவித்த கருணாநிதி, அதற்குச் சில மாதங்களுக்கு முன்பே மத்திய – மாநில அரசுகளின் உறவுநிலை குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தருவதற்காக குழு ஒன்றை அமைத்திருந்தார். 22 செப்டெம்பர் 1969 அன்று அமைக்கப்பட்ட அந்தக் குழுவுக்குத் தலைவராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் ராஜமன்னார் நியமிக்கப்பட்டார். அந்தக் குழுவில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் இடம்பெற்றனர்.
ராஜமன்னார் கமிட்டி பணிகளைத் தொடங்கிய நிலையில் தேசிய அளவில் அரசியல் மாற்றங்கள் பல நிகழ்ந்தன. மக்களவை கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு கூறுகளாகப் பிரிந்திருந்தது. இந்திரா தலைமையில் ஒரு பிரிவு. நிஜலிங்கப்பா உள்ளிட்டோர் தலைமையில் இன்னொரு பிரிவு. திடீரென பிரதமர் இந்திரா காந்தி – முதலமைச்சர் கருணாநிதி இருவரும் டெல்லியில் சந்தித்துக் கொண்டனர்.
காங்கிரஸ் என்றாலே திமுகவுக்கு வேப்பங்காய் என்ற கருத்து நிலவிய சூழலில் எதற்காக இந்தச் சந்திப்பு என்ற கேள்வி பலமாக எழுந்தது. ஆனால் கருணாநிதியோ வேறு கோணத்தில் சிந்தித்தார். மத்தியில் இந்திராவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது; அடுத்த பிரதமராக வருவதற்கு அவருக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்; ஆகவே, அவருடன் கூட்டணி வைப்பதன்மூலம் எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அதிக பலன்கள் கிடைக்கும்; தவிரவும், திமுகவுக்கு ஆதரவான சூழல் நிலவும் நிலையில் உடனடியாகத் தேர்தலை நடத்தி, திமுக ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கணித்தார். ஒரே வரியில் சொல்வதென்றால் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயாராகிவிட்டார் கருணாநிதி.
3 ஜனவரி 1971 அன்று சென்னையில் திமுக செயற்குழுவும் பொதுக்குழுவும் கூடி விவாதித்தன. அதன் முடிவில் தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. திமுகவும் இந்திரா காங்கிரஸும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டன.
உண்மையில் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸுக்குத்தான் அப்போது செல்வாக்கு அதிகம். இந்திரா காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் பலமில்லை. ஆகவே, நாடாளுமன்றத்துக்கு 5 முதல் 7 தொகுதிகளும் சட்டமன்றத்துக்கு 10 முதல் 15 தொகுதிகளும் ஒதுக்கத் தயார் என்றார் கருணாநிதி. சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்திராவைத் தொடர்புகொண்டு பேசினார் கருணாநிதி. அதன் பலனாக இந்திரா காங்கிரஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை; ஆனால் பாண்டிச்சேரியுடன் சேர்த்து பத்து நாடாளுமன்றத் தொகுதிகள் கூட்டணியில் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்னொரு பக்கம் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் ராஜாஜியின் சுதந்தரா கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தன. திமுக – இந்திரா காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்த பெரியார், ராஜாஜி – காமராஜர் கூட்டணிக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். இரண்டு கூட்டணிகளிலும் இடம்பெறாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 37 தொகுதிகளில் தனித்து நின்றது.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் புதிய வீடுகளைக் கட்டியுள்ளனர். கார்கள் வாங்கியுள்ளனர். திமுக நிர்வாகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. ஆளுங்கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்தால்தான் இந்த அரசாங்கத்தில் எந்தக் காரியமும் நடக்கிறது என்று புகார் பிரசாரம் செய்தார் காமராஜர். சேலத்தில் ராமர் படம் அவமதிக்கப்பட்டதும் தேர்தல் பிரச்னையாகப் பேசப்பட்டது. இந்துக் கடவுளரைச் செருப்பால் அடித்த பெரியாரின் சிலையைத் திறந்த அவருடைய சீடர் கருணாநிதிக்கா உங்கள் ஓட்டு? என்று கேள்வி கேட்கும் சுவரொட்டி தேர்தல் களத்தை வெப்பமாக்கியது.
திமுக கூட்டணிக்கு எம்.ஜி.ஆரும் காமராஜர் கூட்டணிக்கு சிவாஜி கணேசனும் பிரசாரம் செய்தனர். மின்னல் வேகப் பிரசாரத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆருக்கு சென்ற இடங்களில் எல்லாம் அபார வரவேற்பு. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் எம்.ஜி.ஆர் நீக்கமற நிறைந்திருந்தார். வெள்ளைத் தொப்பி, கறுப்புக் கண்ணாடி சகிதம் தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்தார். பிரசாரம் முடிந்ததும் ‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீர் புறப்பட்டார் எம்.ஜி.ஆர்.
மார்ச் 1, 4, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல்கள் முடிந்தன. காமராஜருக்கும் ராஜாஜிக்கும் கூடிய கூட்டத்தை வைத்து காமராஜரே முதல்வராகப் போகிறார் என்று கணித்தது மாநில உளவுத்துறை. அதனை நம்பி காவல்துறை அதிகாரிகள் பலரும் காமராஜரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. 183 சட்டமன்றத் தொகுதிகளையும் 23 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது திமுக. இந்திரா காங்கிரஸ் பத்து மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் மட்டும் எதிர்கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றிருந்தார்.
உண்மையில், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக என்ன ஆகுமோ என்ற கேள்வி தேசிய அளவில் எழுந்தது. எனினும், கருணாநிதி தலைமையில் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களைத் துணிச்சலாகச் சந்தித்த திமுக, அண்ணா தலைமையில் பெற்ற வெற்றியைவிடப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. அண்ணா தலைமையில் வென்ற தொகுதிகள் 138; கருணாநிதி தலைமையில் 183.
14 மார்ச் 1971 அன்று திமுகவின் சட்டமன்றக் குழுவின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது கருணாநிதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் எம்.ஜி.ஆர்!
(தொடரும்)
0
ஆர். முத்துக்குமார்
www.tamilpaper.net/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக