திங்கள், 26 செப்டம்பர், 2011

தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை :"உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், அரசு அறிவிப்புகள் தேர்தல் விதிமீறல் என்றும், அதன் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா என்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது கேள்வி - பதில் அறிக்கை:

பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
அது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் அல்லவா? தேர்தல் முடிவு வெளியாகும் வரை அரசின் நலத்திட்டங்களுக்குத் தடை என்றும், தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது, தேர்தல் விதியின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் கமிஷன் அறிக்கை விட்டிருக்கிறது.ஆனால், போலீஸ் துறையிலும், பள்ளிக் கல்வித் துறையிலும் ஏராளமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய தேர்தல் விதிமீறல்களுக்கு கமிஷன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அண்ணா மாளிகையில் அமர்ந்திருக்கும் அய்யர் என்ன செய்யப் போகிறார்?


கூடங்குளம் அணுமின் திட்டப் பணிகளை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம், தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதாக செய்தி வந்துள்ளதே?
கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய தீர்மானத்தில் கூட, அந்த அணு மின் நிலையம் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை. மாறாக, மக்கள் பயத்தில் இருந்து விடுபடும் வரை, திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தான் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். அமைச்சரவையில் தீர்மானத்தை ஆழ்ந்து படித்தால், இதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், அதற்கே தான் முதல்வருக்கு நன்றி, பாராட்டு என்றெல்லாம் குரல் கொடுக்கின்றனர்.

தி.மு.க., மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரது கொலை வழக்கில், கட்சிப் பொருளாளரை சம்பந்தப்படுத்தி ஆளுங்கட்சிக்குச் சொந்தமான, "டிவி'யில் 24 மணி நேரமும் பிரசாரம் செய்தது தவறு என்று கொலையுண்டவரின் கணவரே சொல்லியிருக்கிறாரே?
இந்த ஆட்சியில் போலீஸ் துறையினர் எந்த அளவிற்கு எதிர்க்கட்சியினர் மீது வழக்கு போட துணை போகின்றனர் என்பதற்கு இதுவே சரியான உதாரணம். கொலை செய்யப்பட்டவரின் கணவரே எழுதிக் கொடுத்துள்ள மனுவில், தன் மனைவி கொலை செய்யப்பட்டதில், முன்னாள் துணை முதல்வர் மற்றும் அவரது தனி உதவியாளருக்கு தொடர்பில்லை என்றும், தற்போதுள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் வற்புறுத்தலால், பொய்ப் புகார் கொடுத்தேன் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருக்கிறார்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக