திங்கள், 26 செப்டம்பர், 2011

தென்மாவட்டங்களில் பா.ம.க., காலி: போட்டியிட கட்சியினர் தயக்கம்

திருநெல்வேலி :தென்மாவட்டங்களில் பா.ம.க., சார்பில் போட்டியிட யாரும் முன்வராததால், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டென்ஷன் ஆகியுள்ளார்.

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலில், அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதால், பா.ம.க.,போன்ற கட்சிகளின் நிலை பரிதாபமாகி விட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், டாடா நிறுவனத்திற்கு நில ஆர்ஜித விவகாரம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற பொதுப்பிரச்னைகளில் பா.ம.க., முன்னின்று போராடியது.இருப்பினும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இந்த மூன்று மாவட்டங்களிலும் யாரும் முன்வரவில்லை. நெல்லை மாநகராட்சியில் பெண் மேயர் மற்றும் 55 வார்டுகளில், பத்து வார்டுகளில் கூட போட்டியிட ஆட்கள் முன்வராததால், வேட்பாளர் பட்டியல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

வேட்பாளர் தேர்வு தொடர்பாக மதுரையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், ""தேர்தல் செலவுக்காக ஒரு பைசா கூட கட்சியில் இருந்து எதிர்பார்க்காதீர்கள்,'' என, கறாராக கூறிவிட்டாராம். இதனால், தோற்பது என முடிவான பிறகு கைக்காசை செலவழித்து வீணடிப்பதா என, கட்சியினர் பின்வாங்குகின்றனர்.

மேலும், கட்சியின் சின்னமாக "மாம்பழம்' வரும் லோக்சபா தேர்தலுடன் பறிபோகும் நிலை உள்ளது. எனவே, பா.ம.க., இந்த தேர்தலில் பெறும் ஓட்டு சதவீதத்தை வைத்தே இனி சின்னம் கிடைக்குமா என்ற நிலை உள்ளது. எனவே, அனைத்து இடங்களிலும் கட்சியினரை நிறுத்தி, கணிசமான ஓட்டுக்களை பெற வேண்டும் என்பது ராமதாசின் விருப்பமாகும்.

ஆனால், தென்மாவட்டங்களில் பா.ம.க., சார்பில் யாரும் போட்டியிட முன்வரவில்லை. எனவே, கட்டாயப்படுத்தியாவது போட்டியிட வைத்து, வரும் 27ம் தேதிக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட, பா.ம.க., தலைமை திட்டமிட்டுள்ளது. கட்சியினரின் இந்த போக்கால் ராமதாஸ் கடும் டென்ஷனில் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக