வெள்ளி, 30 செப்டம்பர், 2011

புற்றுநோயில் இருந்து எஜமானரை மீட்டது நாய் இங்கிலாந்தில் ஆச்சரியம்

லண்டன் : எஜமானருக்கு புற்றுநோய் இருப்பதை மோப்ப சக்தியால் கண்டறிந்து உணர்த்தி உயிரை காப்பாற்றியுள்ளது செல்ல நாய். இது இங்கிலாந்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி லண்டனில் வெளியாகும் டெய்லி ஸ்டார் நாளிதழில் இடம்பெற்ற செய்தி வருமாறு: இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரெண்டா ஜோன்ஸ். வயது 47. இவரது 5 வயது செல்ல நாய் மர்பி. கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்து அதன் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்தது. எப்போது பார்த்தாலும் பிரெண்டாவின் மடியில் வந்து படுத்துக் கொண்டது. வித்தியாசமான சத்தம் எழுப்பியது.
ஒரு வாரமாக அதை கவனித்த பிரெண்டா, ஏன் இப்படி செய்கிறாய் என்று அதை கேட்டபோது, ஒரு காலால் அவரது இடது மார்பகத்தை அழுத்தியது.
அந்த இடம் பிரெண்டாவுக்கு கடுமையாக வலித்தது. நாயின் கால் பதிந்த வலி போல அது தெரியாததால், கண்ணாடி முன் அந்த இடத்தை கவனித்தார். அங்கு நாணயம் அளவுக்கு கட்டி போல இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொண்டார். பிரெண்டாவுக்கு மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலை ஏற்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். புற்றுநோய் கிருமிகள் மேலும் பரவாமல் செமோதெரபியை தொடர்கின்றனர். கட்டியை மேலும் சில நாட்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பிரெண்டாவின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

புற்றுநோய்க்கு பலியாக இருந்த தன்னை செல்ல நாய் மர்பிதான் காப்பாற்றியதாக அனைவரிடமும் பெருமை பொங்க கூறுகிறார் பிரெண்டா. இதுபற்றி மருத்துவ நிபுணர் ஒருவர் கூறுகையில், ‘‘மோப்ப சக்தி மூலம் புற்றுநோய் கிருமியை நாய் கண்டுபிடித்துள்ளது. அதை சரியான நேரத்தில் தொட்டுக் காட்டியுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக