ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

.ராசாவும் கனிமொழியும் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த நேரடியான தாக்குதல்

''ஸ்பெக்ட்ரம் வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சர் ஆகி வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. டெல்லி வட்டாரத்தில் பலமாகப் பேசப்படும் விஷயங்களை நான் உமக்குச் சொல்கிறேன். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் 'டிராய்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சந்தேகங்களுக்கு அடிப்படைக் காரணம். '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது அந்த அறிக்கை. ஏலத்தில் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அரசுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை சொன்ன பிறகுதான் நாட்டில் இந்த விஷயம் தீயாய் கிளம்பியது. சி.பி.ஐ. இந்த விஷயத்தைக் கையில் எடுத்து விசாரித்தது. இதில் முகாந்திரம் இருப்பதாக நம்பிய பிரதமர், அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார். இதில் கலைஞர் டி.வி. சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சொல்லி, கனிமொழியும் கைதானார். தயாநிதி மாறன் மீது புகார் கிளம்பியது. அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர். 14 பேர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நீதிபதி சைனி, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் காரியத்தில் மும்முரமாகி உள்ளார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் டிராய், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது. ஆ.ராசா ஆதரவு வட்டாரத்தின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் சிரிப்பு மலர ஆரம்பித்துள்ளது!''

''டிராய்... தடுமாறுவது ஏன்?''
 
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த நேரடியான தாக்குதல்தான் டிராயின் இந்த வழுக்கலுக்குக் காரணமாம். 'அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நான் எதையும் செய்யவில்லை’ என்று ராசா சொன்னார். அதையே கனிமொழியும் சொன்னார். மன்​மோகன், சிதம்பரம் இப்போதைய தொலைத் தொடர்​புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரையும் சாட்சிகளாகச் சேர்க்க வேண்டும் என்று இவர்களது தரப்பு வழக்கறிஞர் சுஷில்குமார் சொல்லி மேலும் டென்ஷனை அதிகப்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் மேலிடம் தனது சுருதியை மெள்ளக் குறைக்க ஆரம்பித்துள்ளதாம்...''

''ஆனால் சி.பி.ஐ.?''

''அரசாங்கம் தகவல்களை முறையாகக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பும் தந்தால்தானே வழக்கை முறையாக நடத்த முடியும்? என்னதான் நேர்மையான அதிகாரிகள், வளைந்து கொடுக்காத அதிகாரிகள் இருந்தாலும் பெரிய இடத்துப் பொல்லாப்பை எவ்வளவு காலம்தான் சமாளிக்க முடியும்? இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம், லேசாக கலர் மங்க ஆரம்பித்து இருப்பதாகவே சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் பிரசாந்த் பூஷண் மனுவும் தாக்கல் ஆகி உள்ளது. 'தயாநிதி மாறனின் பங்குகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை சி.பி.ஐ. கண்டு கொள்ளவில்லை. எனவே அவரிடம் முறையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும்’ என்று சொல்கிறது பிரசாந்த் பூஷணின் மனு. டிராய் கொடுத்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 6-ம் தேதி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது உள் குழப்பம் ஆரம்பம் ஆகிவிட்டது. இது இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கான முஸ்தீபுகளாகத்தான் தெரிகிறது''

''உச்ச நீதிமன்றம் சும்மா இருக்காதே?''

''அவர்களது மேற்பார்வையில்தான் வழக்கே நடக்கிறது. எனவே அவர்களும் இதை உன்னிப்பாகத்தான் கவனிக்கிறார்கள். டிராய் அறிக்கை வெளியானதற்கு மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்வான் இயக்குநர் வினோத் மற்றும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் சிங்வீ, டாட்டூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் இதை விசாரித்தது. வினோத், சஞ்சய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டிராய் சொல்லி இருக்கிறது’ என்பதை ஜாமீன் வழங்குவதற்கான ஆதாரமாகக் காட்டினார். அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீலும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரீன் ரவால், 'டிராய் அறிக்கை, மத்திய அரசுத் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம்தான். அது ரகசியமானது’ என்றார். 'பத்திரிகையில் வெளியான பிறகு என்ன ரகசியம்? இந்த அறிக்கை பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்’ என்றார்கள் நீதிபதிகள்.
thanks vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக