வியாழன், 15 செப்டம்பர், 2011

தயாநிதியிடம் சி.பி.ஐ., 5 மணி நேரம் விசாரணை

புதுடில்லி: மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதியிடம் சி.பி,.ஐ., அதிகாரிகள் நேற்று ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, 2001 முதல் 2007 வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன், தனது நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும்படி, அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி நெருக்கடி கொடுத்ததாக, சி.பி.ஐ.,யிடம் புகார் தெரிவித்திருந்தார்.

சிவசங்கரன் அளித்த புகாரில், "என் நிறுவனத்துக்கு உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்தபோது, உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்தனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள், மேக்சிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆறு மாதத்துக்குள், அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது' என, தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்தும் சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தயாநிதி பதவிக் காலத்தில், ஏர்செல் நிறுவனத்தின் புரோமோட்டருக்கு, "லெட்டர் ஆப் இன்டென்ட்' வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், சி.பி.ஐ., மீது, ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தயாநிதி மீது உரிய வகையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தயாநிதி மீதான விசாரணை தொடர்ந்து கொண்டு இருக்கிறது' என தெரிவித்தார். மேக்சிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினரும், ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரால்ப் மார்ஷலிடம் சமீபத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து சன் குழுமத் தலைவரும், தயாநிதியின் சகோதரருமான கலாநிதியிடமும் சி.பி.ஐ, அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று தயாநிதியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஐந்து மணி நேரம் நடந்த விசாரணையில், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் குறித்தும், அவரது பதவிக் காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவது பற்றியும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை தயாநிதி மறுத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. பி.டி.ஐ., யு.என்.ஐ., செய்தி ஏஜன்சிகளும் இந்த தகவலை தெரிவித்துள்ளன.

இன்று குற்றச்சாட்டு பதிவு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்ளிட்ட, 17 பேர் மீதும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து, டில்லி சிறப்பு கோர்ட்டில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக