செவ்வாய், 6 செப்டம்பர், 2011

சாதி மோதலை உருவாக்கிய பிள்ளையார்! 3 பேர் கவலைக்கிடம்



கடலூர் மாவட்டம் வேப்பூரில் வருடம் தோறும் அந்த ஊர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஒரு இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்படும். அந்த பிள்ளையாரை அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பார்கள்.
இந்த வருடம் தாழ்த்தப்பட்ட மக்கள் தனியாகவும், இதர மக்கள் தனியாகவும் பிள்ளையார் சிலைகளை வைத்துள்ளனர். இறுதியாக ஊர்வலம் இதர மக்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால், தங்கள் பக்கம் ஊர்வலம் வரும்போது, மேளம் தாளம் இல்லாமல், எந்தவித சத்தமும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை உதவியுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பிள்ளையார் சிலையை மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்தனர்.
போலீஸ் உதவியுடன் பிள்ளையாரை கரைத்தவர்கள், சத்தம் போடாமல் போகச் சொன்னவர்களை, சம்மந்தப்பட்ட தெருவிலேயே ஆபாச வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது.
தாங்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான், இதர மக்கள் தங்கள் விவசாய வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதால், அவர்களை இந்த வழியாக வரக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அந்த வழியாகச் சென்ற சுப்பிரமணியன் என்பவரை தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் தாக்கியுள்ளனர்.
இந்த செய்தி இருதரப்புக்கும் பரவியதையடுத்து, இருதரப்புக்கும் மோதல் உருவாகியுள்ளது. இந்த மோதலில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் இருவரை 2 பேர் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் மோதல் உருவாகாமல் தடுப்பதற்காக கடலூர் மாவட்ட எஸ்பி பகலவன் தலைமையில், பண்ருட்டி டிஎஸ்பி, சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரஜேந்திரன், விருத்தாசலம் டிஎஸ்பி அறிவழகன், திட்டக்குடி டிஎஸ்பி வனிதா உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிலும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்து மத ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் பிள்ளையாரை வழிபாடு நடத்தி கொண்டு சென்று தண்ணீரில் கரைப்பது வழக்கம். ஆனால் இந்த பிள்ளையார் வழிபாட்டால் சாதி மோதல் உருவாகி 3 பேர் கவலைக்கிடமாக உள்ளது நமக்கு கவலையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக