செவ்வாய், 6 செப்டம்பர், 2011

அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு

திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3 மாதங்களுக்கு முன்பு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரியம் பிச்சை, திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தினார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது.

ஆனால் சட்டசபை உறுப்பினர்கள் பதவியேற்புக்காக திருச்சியிலிருந்து சென்னைக்குக் காரில் கிளம்பிய மரியம் பிச்சை சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து இந்தத் தொகுதி காலியானது. இங்கு வருகிற அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை செப்டம்பர் 19ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. செப்டம்பர் 26ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 27ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 29ம் தேதிக்குள் வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
வாக்குப் பதிவு அக்டோபர் 13ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 17ம் தேதி நடைபெறும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி இந்திரா நகரிலும்
இதேபோல புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்த இந்திரா நகர் தொகுதியிலும் அக்டோபர்13ம் தேதியே இடைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அவர் 2 தொகுதிகளில் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக