3டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் இசைப்பயணம் மேற்கொண்டு இசைக் கச்சேரிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இதற்காக 4 மாதம் படங்களுக்கு இசையமைப்பதையும் நிறுத்தியுள்ளார். "மின்னலே" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சினிமா படங்களுக்கு இசையமைப்பதை சிலகாலம் ஒத்தி வைத்துவிட்டு, உலகம் முழுவதும் புதுமையான முறையில் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ஹாரிஸ் கூறுகையில், நான் சினிமாவிற்கு வந்து 10வருடம் ஆகிவிட்டது. முதன்முதலாக என்னை கவுதம் மேனன் தான் அறிமுகம் செய்தார், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளேன். நிறைய பேர் என்னை, மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும்படி கூறுகின்றனர். அதனை ஏற்று உலகம் முழுவதும் எனது இசைப்பயணத்தை தொடங்க இருக்கிறேன். வழக்கமான இசை நிகழ்ச்சியை போல் இல்லாமல், எனது இசை நிகழ்ச்சி புதுமையாக இருக்கும். அதாவது, 3டி தொழில் நுட்பத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி இருக்கும். வெளிநாட்டு கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் இசை கச்சேரியில் இடம் பெறும்.
இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிகரன், கார்த்திக், திப்பு, கிரிஷ், ஹரிணி, ஆண்ட்ரியா, சின்மயி, பென்னிதயாள், நரேஷ் அய்யர், ஹரீஸ் ராக வேந்திரா உள்பட 17 பேர் மேடையில் தோன்றி பாடுவார்கள். டெக்பிரண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உலக தரத்தில் புது அனுபவமாக இது இருக்கும். முதல் இசை நிகழ்ச்சி சென்னை மாயாஜாலில் அக்டோபர் 2-ந்தேதி நடைபெறும். கோவையில் அக்டோபர் 16-ந்தேதியும் ஐதராபாத்தில் 22-ந்தேதியும், துபாயில் நவம்பர் 18-ந்தேதியும், மலேசியாவில் டிசம்பர் 3-ந்தேதியும் நடைபெறும். என்னுடைய இந்த இசைப்பயணத்திற்காக, 4 மாதங்கள் படங்களுக்கு இசை அமைப்பதை நிறுத்தி வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக