ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

தான்சானியாவில் கப்பல் கவிழ்ந்து 163 பேர் பலி : 100 பேரை காணவில்லை

  ஸன்ஸிபர்: தான்சானியாவில் கப்பல் கவிழ்ந்ததில் 163 பயணிகள் பலியாயினர். 100 பேரை காணவில்லை. இதுகுறித்து, ஸன்ஸபர் மாநில நெருக்கடிநிலை அமைச்சர் முகம்மது அபூத் கூறியதாவது: வெள்ளிக்கிழமையன்று தான்சானியாவின் சுற்றுலா தலமான ஸன்ஸிபர் தீவிலிருந்து 40 கி.மீ.தொலைவில் உள்ள பெம்பா தீவுக்கு 600 பயணிகளுடன் கப்பல் ஒன்று புறப்பட்டது. நுங்வி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மூழ்கத் தொடங்கியது. உடனடியாக கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 325 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் காயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 163 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. எனவே, உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய விபத்துகளில் இதுவும் இடம் பெறும். இதை பேரழிவாக கருதப்படும். ரம்ஜான் விடுமுறையை கொண்டாடிவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து ஏற்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் தான்சானியாவில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக