வியாழன், 29 செப்டம்பர், 2011

வாச்சாத்தி: 12 பேருக்கு தலா 17 ஆண்டு தண்டனை- 5 பேருக்கு 7 ஆண்டு, ரூ.2000 அபராதம்!

தர்மபுரி: வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி குமரகுரு அறிவித்துள்ளார்.
ஐஎப்எஸ் அதிகாரியான ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோருக்குத் தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. ஹரிகிருஷ்ணனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
இதுவரை அறிவித்துள்ள தண்டனை விவரம்:
12 பேருக்கு தலா 17 ஆண்டு சிறைத் தண்டனை
5 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 2000 அபராதம்
150 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை
70 பேருக்கு தலா ஓராண்டு சிறை மற்றும் ரூ. 1000 அபராதம்


ஏன் குறைந்த அளவிலான தண்டனை?
சாதாரண பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்த காரணத்தால்தான் குறைந்த அளவிலான தண்டனை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.வாச்சாத்தி கிராமத்தில் ஆதிவாசி மக்கள் மீது காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய கோர வெறியாட்டம் தொடர்பாக வனத்துறையைச் சேர்ந்த 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 54 பேர் விசாரணையின்போதே செத்துப் போய் விட்டனர். மற்ற215 பேர் மீதும் வழக்கு நடந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் அத்தனை பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

269 பேர் மீதும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பலர் மீது பாலியல் பலாத்காரத்திற்காக 376வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேபோல ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தாக்கிக் காயப்படுத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதில் கற்பழிப்பு வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஐபிசி 376வது சட்டப் பிரிவு கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மீது தொடரப்படும் பிரிவாகும். பாலியல் பலாத்காரம் என்பது பல்வேறு வகையான பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. 12 வயதுக்கு உட்பட்டவர்களை பலாத்காரம் செய்வது, 18 வயதுக்கு உட்பட்டவர்களை பலாத்காரம் செய்வது, 18 வயதுக்கு மேற்பட்டோரை பலாத்காரம் செய்வது, கும்பலாக பலாத்காரம் செய்வது என பல்வேறு வகைகளாக இந்த குற்றம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப தண்டனை தரப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேபோல வன்முறையில் ஈடுபடுவோர் மீது 147வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தரப்படும்.

ஐபிசி 149வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டோருக்கு 2 வருட சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துக் கிடைக்கும்.

ஐபிசி 323ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டோருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை , ரூ. 1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துக் கிடைக்கும்.

ஐபிசி 342ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டோருக்கு ஒரு வருட சிறை, அல்லது ரூ. 1000 அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்துக் கிடைக்கலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக