புதன், 10 ஆகஸ்ட், 2011

Kandy மக்களை அச்சுறுத்தி வந்த மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது!

கண்டி பிரதேசத்தில் இரவு நேரங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த மர்ம மனிதர்கள் 27 பேர் பொலிஸாரால் கைது!

கண்டி பிரதேசத்தில் இரவு நேரங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த கிறீஸ் மனிதர்கள் 27 பேர் இதுவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் திருடர்கள், மனநோயாளிகள் மற்றும் பொய் வதந்திகளை பரப்புவோர் அடங்கியுள்ளனர் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்றுக் காலை சபையின் தலைவர் சாலிய பண்டார திஸா நாயக்க தலைமையில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் திருமதி சாந்தினி கோஹங்காகே பேசுகையில், குண்டசாலை உட்பட பல பகுதிகளில் கிறிஸ் மனிதனின் அச்சுறுத்தல்களும் தொல்லைகளும் அதிகரித்துள்ளதால் மக்கள் இரவு நேரங்களில் பீதியுடனேயே இருந்து வருகின்றனர்.
சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் பேசுகையில்: மக்களைப் பீதிக்குள்ளாக்கும் பூதம் என்ற கிறிஸ் மனிதனின் நடவடிக்கைகள் தோட்டப்பகுதிகளுக்குள்ளும் பரவி வந்ததுடன் உறவினர்களுக்குக் கூட இரவு வேளைகளில் தனிமையில் தோட்டப்பகுதிகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டியில் உள்ள டெம்பலடோ தோட்டத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த வெளியார் ஒருவரை சிலர் கிறிஸ் மனிதன் எனக் கருதி நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
சபையின் தலைவர் சாலிய பண்டார சில தினங்களுக்கு முன்னர் எனது கிராமப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கிறிஸ் மனிதன் வந்திருப்பதாக தொலைபேசியில் எனக்கு அறிவிக்கப்பட்டது. இரவு நேரம் நான் எனது வாகனத்தை எடுத்துக் கொண்டு விரைந்து சென்ற போது குறிப்பிட்ட வீட்டின் முன்பாக காணப்பட்ட கருப்பு நிறத்திலான உருவம் ஒன்று என்னை கண்டதும் ஓடி மறைந்து விட்டது என்றார்.
இவற்றிற்கு செவிமடுத்த பின்னரே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் இவ்விடயங்கள் குறித்து பொலிசாருக்கு விளங்கப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக