செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

துப்பாக்கியைக் காட்டி வீட்டைப் பறித்ததாக ஜெ.அன்பழகன்-மன்னன் மீது புதுப் புகார்

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தனது வீட்டை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜே. அன்பழகனும், சன் டிவி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் உதவியாளர் அய்யப்பனும் பறித்துக் கொண்டதாக புதிதாக ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நள்ளிரவில் அன்பழகன் அதிரடியாக திருப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் ஆலையைப் பறித்துக் கொண்டது தொடர்பான வழக்கில் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது அன்பழகன் மற்றும் அய்யப்பன் ஆகியோர் மீது புதிய புகார் எழுந்துள்ளது.

சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த தர்மராஜ் என்ற தொழிலதிபர் இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில்,

கடந்த 1994-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவருக்கு சொந்தமான தியாகராயநகர் வெங்கட நாராயணா ரோட்டில் உள்ள வீட்டை அடமானமாக வைத்து என்னிடம் ரூ.17 லட்சம் கடன் வாங்கினார். 3 ஆண்டுகளில் வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி தருவதாகவும் அப்படி தராவிட்டால் அந்த வீட்டை எனது பெயருக்கே பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் எழுதிக்கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு சீதா கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டார். ரூ.17 லட்சம் கடனை அவர் திருப்பி தராததால் அந்த வீடு எனக்கு சொந்தமானது. பின்னர் 2007-ம் ஆண்டு நான் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது கருணாகர் பெகரா என்பவர் வீட்டில் இருந்தார்.

அவர் என்னிடம் சீதா கிருஷ்ணமூர்த்தி இந்த வீட்டை தனக்கு கொடுத்து விட்டதாக கூறினார். இதற்காக உயில் எழுதி கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சக்சேனா உதவியாளர் அய்யப்பன், 127-வது வார்டு தி.மு.க. செயலாளர் உதயசூரியன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் என்னை துப்பாக்கி காட்டி மிரட்டி அந்த வீட்டை எழுதி வாங்கிக் கொண்டனர்.
மேலும் ரூ.4 கோடி மதிப்பில் வீடு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த விற்பனை பத்திரத்தையும் ரத்து செய்து அவர்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டனர். எனவே இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை மன்னனும் கைதாகிறார்
இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன்,மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் முக்கிய உதவியாளர்களில் ஒருவர். அழகிரியின் முக்கியக் கூட்டாளிகளான தளபதி, பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் கைதாகி உள்ளே போய் விட்டனர். மன்னன், முபாரக் மந்திரி உள்ளிட்ட சிலர் மட்டுமே வெளியே உள்ளனர். இந்த நிலையில் மன்னன் மீது புகார் எழுந்துள்ளதால் அடுத்து உள்ளே போகப் போவது அவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக