திங்கள், 8 ஆகஸ்ட், 2011

இரவில் படுத்தால் காலையில் எந்த பொலிஸ் அதிகாரி முகத்தில் விழிப்போமெனத் தெரியவில்லை : கருணாநிதியின் கவலை!

நான் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது.நான் இருக்கும் வரை எனக்குப் பின்னரும் கூட தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி ‘ளுரைத்துள்ளார். திருவாரூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் பூண்டி கலைவாணன் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து திருவாரூரில் தி.மு.க.கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கருணாநிதி மேலும் கூறியதாவது;

ஜெயலலிதா கொடுத்த பொய் வழக்குகளை கண்டித்து இந்த கூட்டம் நடைபெறுகின்றது. பொய் வழக்குகளை வேக வேகமாக தொடுத்து அதில் தி.மு.க.வினரை சல்லடையாக துளைத்துவிடலாம் என்ற ஆட்சியாளர்களின் அராஜகத்துக்கு மக்கள் பதிலடி கொடுக்க நீண்டகாலம் காத்திருக்க அவசியமிருக்காது.இப்போது நடப்பவற்றை கடந்த தி.மு.க.ஆட்சியோடு ஒப்பிட்டு பாருங்கள்.இது பொய் வழக்கு மட்டுமல்ல,அராஜக வழக்காகவும் தொடரப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தது?தி.மு.க.அரசு ரூ. 1 இலட்சம் கோடி கடன் வைத்துள்ளது என்று ஊர் ஊராக கூட்டம் போட்டும் சொன்னார்கள்.அரசு செலவினங்களுக்காக திட்டங்களுக்காக மக்கள் பிரச்சினைகளை அணுகுவதற்காக கடன் வாங்குவது அரசின் கடமை.2006 இல் அ.தி.மு.க.ஆட்சி முடியும்போது தமிழக அரசின் கடன் சுமை ரூ.57 ஆயிரத்து 457 கோடி.2006 முதல் 2011 வரை தி.மு.க.ஆட்சியில் ரூ.43 ஆயிரத்து 892 கோடி கடன்தான் பெறப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் அ.தி.மு.க.ரூ.1 இலட்சத்து 18 ஆயிரத்து 802 கோடி கடன் என்கிறது.அதாவது பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளது.
இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறீர்கள்.எப்படியோ வந்து விட்டார்கள். வந்தவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம். நான் இங்கே நன்றி கூற வந்தபோது கூட யாரையும் புண்படுத்தி பேசவில்லை. பண்படுத்தி பேச வேண்டும் என்பதுதான் அண்ணா கற்றுத் தந்த பாடம்.
இது நாடா?அல்லது கடும் புலிகள் வாழும் காடா?இரவில் படுத்தால் காலையில் யார் முகத்தில் விழிப்போம் என்பது தெரியவில்லை.பொலிஸ் முகத்திலா?ஐ.ஜி,டி.ஐ.பி.முகத்திலா? மக்கள் சுதந்திரமாக வாழ்கிறோம் என்று எண்ண முடியுமா?சுதந்திரம் பறிபோகும் ஆட்சி இன்று நடக்கிறது.
தி.மு.க.ஆட்சியில் அம்மையாரை சிறையில் அடைத்தது நானல்ல.நீதிமன்றம் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது.அதனால் கைது செய்யப்பட்டார்.ஆனால் பெண்ணுக்குரிய உரிமை சிறிதளவும் குறையாமல் பார்த்துக் கொண்டோம். இப்போது அவருக்கு அதிக கோபம் வரக் காரணம் பெங்களூர் வழக்கு.இதுவரை 130 முறை வாய்தா வாங்கி இருக்கிறார்.சுப்பனோ குப்பனோ 2 தடவை வாய்தா தவணை கேட்டால் இந்த பொலிஸ் ராஜ்ஜியத்தில் சும்மா விடுவார்களா?
தி.மு.க.வை அழித்து விடலாம் என நினைக்கிறார்கள். இது ஏழைகளுக்காக பாடுபடும் கட்சி.தொழிலாளர்களுக்கு பாடுபடும் கட்சி.குடிசைகளில் வாழும் மக்களுக்கான கட்சி என்பதற்காக அல்ல. திராவிட உணர்வை தமிழகத்தில் தட்டி எழுப்பும் கட்சி என்பதற்காகத்தான்.திராவிட உணர்வு தி.மு.க.வை தவிர வேறு எந்தக் கட்சி தட்டி எழுப்புகிறது?மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இனம் இந்த திராவிட இனம். இந்த திராவிட உணர்வை தாங்கிக் கொண்டிருக்கின்ற கட்சி தி.மு.க.தான்.நான் எவ்வளவு நாளைக்கு இருப்பேனோ என்று தெரியாது.நான் இருக்கும் வரைக்கும் சரி.எனக்குப் பின்னும் யாராலும் தி.மு.க.வை அழிக்க முடியாது. இந்த கழகத்தை எவராலும் அழிக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.வை யாராலும் பட்டுப் போக செய்ய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக