திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சென்னை ஹோட்டல்கள் இலங்கையர்க்கு மறுக்கின்றன

சென்னை: இலங்கை யாத்திரிகர்களுக்கு சென்னை ஹோட்டல்களில் இடம் கொடுக்கக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள மகா போதி சங்கத்திற்கு இலங்கையில் இருந்து யாத்திரிகர்கள் வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்களுக்கு ஹோட்டல்களில் இடம் கொடு்ககக் கூடாது என்று சென்னை போலீசார் உத்தரவி்ட்டுள்ளனராம். இதனால் ஹோட்டல்களில் சிங்களர்களுக்கு இடம் தர ஹோட்டல் நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. இதனால் இலங்கை யாத்திரிகர்கள் தங்க இடமில்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

போலீசார் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி மகா போதி சங்க யாத்திரிகர்களுக்கு வட சென்னையி்ல உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் இடம் கொடு்கக மறுக்கின்றன என்று சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை இறுதி முதல் தான் மகா போதி சங்க சீசன் தொடங்கும். இலங்கையில் இருந்து பல யாத்திரிகர்கள் இங்கு வருவார்கள். ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் பேர் வருவார்கள். மகா போதி சங்கத்தில் 250 பேர் தான் தங்க முடியும். அதனால் யாத்திரிகர்கள் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்குவது வழக்கம்.

தற்போது போலீசாரின் உத்தரவையடுத்து இலங்கை யாத்திரிகர்களை தங்க வைக்க ஹோட்டல்கள் மறுக்கின்றன. இது குறித்து சட்டம், ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணனிடம் கேட்டதற்கு, இலங்கையில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் எந்த ஹோட்டல்களுக்கும் உத்தரவிடவில்லை என்றார்.

அதேசமயம், ஹோட்டல்களில் வெளிநாட்டினர் தங்கினால் அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் தர வேண்டு்ம்.அப்படித் தகவல் தராத ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுரை போயுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஹோட்டல்களோ போலீசார் தான் உத்தரவிட்டனர் என்கின்றன. போலீசாரின் இந்த உத்தரவால் மகா போதி சங்கத்திற்கு வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2-ம் தேதி ஒரு கும்பல் சிங்களவர்களை  தாக்கி அவர்கள் அணிந்திருந்த டி ஷர்டுகளை கழற்றச் செய்து தீ வைத்து எரித்தன. கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி எழும்பூரில் உள்ள மகா போதி சங்கத்தில் இருந்த 4 புத்த பிட்சுக்கள் மீது பெரியார் திராவிடக் கழகத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் தான் போலீசார் இலங்கை யாத்திரிகர்களை தங்க வைக்கக் கூடாது என்று ஹோட்டல்களுக்கு உத்தரவிட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக