திங்கள், 8 ஆகஸ்ட், 2011

புலிகள் ராணுவ உடையில் சிறுவர்களையும் பெண்களையும் படுகொலை செய்தார்கள்.”

செனல் 4 விவரணப் படங்கள் அப்பட்டமான பொய்: தமிழ்ச் செல்வன் மனைவி்,   சூசையின் மனைவி்,  தயாமாஸ்டர் தெரிவிப்பு
செனல்-4 அலைவரிசை வெளியிட்டுள்ள விவரணப்படங்கள் அப்பட்டமான பொய் என்பதை புலிகள் இயக்கத் தலைவர்களின் மனைவிமார்களதும், அவ்வியக்கத்தின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளரதும் கூற்றுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
வன்னி மக்களின் மனித உரிமைகளைப் பறித்ததுடன் அவர்களை தம்மிஷ்டப்படி பயன்படுத்தியதும் புலிகளேயன்றி இராணுவத்தினர் அல்லர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"இராணுவத்தினர் எம்மை சிறந்த முறையில் பராமரிக்கின்றனர். எமது குறைநிறைகளைக் கேட்டறிந்து எமக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர். எங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலுமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தியதும் கிடையாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் மனைவியான ரேகா குறிப்பிடுகையில், “இராணுவ அதிகாரிகள் எம்மை நன்கு கவனித்துப் பராமரிக்கிறார்கள். தினமும் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் எமது தேவைகளையும், குறை நிறைகளையும் கேட்டறிகிறார். எமது தேவைகள் எமக்குப் பெற்றுத் தரப்படுகின்றன.”
“நான் ஒரு தடவை நோய் வாய்ப்பட்டிருந்த போது என்னை அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பெண் நோயியல் மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிகிச்சைக்கு உட்படுத்தினார்கள்.”
“எனது பிள்ளைகளின் படிப்புக்கு இராணுவத்தினரே உதவி செய்கின்றனர். இதன் பயனாக எனது பிள்ளைகள் நன்கு கல்வி கற்கிறார்கள். அவர்கள் எனது பெற்றோருடன் நல்லபடி இருக்கின்றார்கள். அவர்களையும் அரசாங்கம் நல்லபடி பராமரிக்கின்றது.” “ஏதோ ஒரு பத்திரிகையில் நான் வெளிநாடு செல்ல முயற்சி செய்வதாக செய்தி வெளியாகி இருந்தது. அது முற்றிலும் பொய்யான செய்தி.

எனக்கு இந்த நாடு நல்லது. லண்டனிலும், இந்தியாவிலும் எனது உறவினர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற வசதி, வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. அதன் காரணத்தினால் நான் இலங்கையை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்” என்று தமிழ்ச் செல்வனின் மனைவி குறிப்பிட்டார்.
கடற்புலிகளின் தலைவரான சூசையின் மனைவியான சத்தியதேவி குறிப்பிடுகையில், “நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். நான் காதலித்துத்தான் திருமணம் முடித்தேன். இப்போது சூசை இல்லை.”
“என்றாலும் அரசாங்கம் எம்மை நல்லபடி பராமரிக்கின்றது. நான் அவர்களின் பாதுகாப்பின் கீழ் நல்லபடி இருக்கின்றேன். நாம் அரசாங்கப் பாதுகாப்பின் கீழ் மகிழ்ச்சிகரமாக உள்ளோம் என்றார். புலிகளின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் தயாமாஸ்டர் கூறுகையில், புலிகள் இராணுவத்தினரின் உடைக்குச் சமமான உடையை அணிந்து கொண்டு சிங்கள, தமிழ் கிராம மக்களைத் தாக்கினார்கள். அதனை எம்மால் அங்கீகரிக்க முடியாது.

என்றாலும் நாம் அப்போது கையாளாகதவர்களாக இருந்தோம். அவர்கள் சிறுவர்கள், பெண்கள் என்று பாராமல் சிவிலியன்களை குரூரமாக படுகொலை செய்தார்கள்.”
“இந்தப் படுகொலைகளுக்கான பழி இராணுவத்தினர் மீது விழ வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இராணுவ உடைக்குச் சமமான உடையை அணிந்து அவற்றைச் செய்தனர்.

இதேபோல் தம்மிடம் பிடிபட்ட இராணுவ வீரர்களையும் அவர்கள் கொன்றார்கள். இராணுவ வீரர்களையும், சிவிலியன்களையும் இராணுவ உடைக்குச் சமமான உடையை அணிந்து கொண்டு தான் அவர்கள் படுகொலை செய்தனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக