திங்கள், 8 ஆகஸ்ட், 2011

உலக ஆட்சியாளர்களை கிடுகிடுக்க வைக்கும் சமுக வலைத்தளங்கள்

 
அமெரிக்காவை மிரள வைக்கும் சமூக வலைத்தளம்
மண்ணைத் தின்று வாயில் உலகைக் காட்டிய கண்ணனின் கதையாக, இன்று ஒவ்வொரு கணினியும் தனது திரைக்குள் இந்த பூவுலகைக் காட்டிக் கொண்டிருக்கிறது. வலைத்தளம் என்ற இன்டர்நெட் புரட்சி இதைச் சாத்தியமாக்கியுள்ளது. வலைத்தளத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக முன்னுக்கு வந்திருப்பது தான் சமூக வலைதளப் பக்கங்கள். முகநூல் எனப்படும் பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் என பல சமூக வலைத்தளங்கள் தற்போது உலகளாவிய அளவில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், அதை உடனடியாக தங்கள் நண்பர்களுக்கு பரப்புவதற்கும் வாய்ப்பைத் தந்துள்ளன.

தொலைக்காட்சிகள் அதிகார மையமாக மேலிருந்து தங்கள் கருத்தை மக்களிடம் திணிக்க முடியுமென்றால், இந்த சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் சொந்த அனுபவம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து விவாதித்து அதை ஒருமைப்படுத்த முடியும், ஒருவரோடு ஒருவர் மட்டுமே தொடர்பு கொள்வது என்ற வரம்பைத் தாண்டி, சமூகமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற பரவலை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மின்னல் வேகத்தில் செயலாற்ற முடியும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்துள்ளன. இதுவே இந்த சமூக வலைத்தளங்களின் சிறப்பம்சம்.

எகிப்துப் பேரெழுச்சி ஏற்பட்டதற்கு அடித்தளமாகச் செயல்பட்டது இந்த சமூக வலைத்தளம் தான். மக்கள் கூட்டம் கூட்டவோ, ஊர்வலம் செல்லவோ, கருத்துப் பிரச்சாரம் செய்யவோ முடியாதபடி சர்வாதிகார ஆட்சியாளர்கள் தடை ஏற்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் சத்தமே இல்லாமல் சமூக வலைப்பக்கங்களில் ஒவ்வொருவராக, பின் எல்லோருமாக ஆட்சியாளர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிராக தங்கள் குமுறலைக் கொட்டினர். குமுறல்கள் ஒருமுகப்பட்ட போராட்டக் குரல்களாக மாறின. சொல்லி வைத்தார் போல் (ஆம், சமூக வலைப்பக்கங்களில் சொல்லி வைத்து) ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் நகரங்கள்தோறும் வீதிகளில் அணிதிரண்டனர். இந்த பேரெழுச்சியின் முன்னால் ஆட்சியாளர்கள் சிறு துரும்பாகிப் போனார்கள். இதுதான் சமூக வலைத்தளம் என்ன சாதிக்க முடியும் என்பதன் மெய் நிகழ்வு.

அடுத்தடுத்து மத்தியக் கிழக்கு, அரபு நாடுகளில் ஏற்பட்ட அதிர்வுகளை இந்த சமூக வலைத்தளங்கள் தான் உருவாக்கின. அதுவும் இந்த எழுச்சி ஏற்பட்டுள்ள நாடுகள் பலவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக, அவர்களது பாதந்தாங்கிகளாகப் பல்லாண்டு காலம் பணிவிடை செய்து வந்தவர்கள்தான். எனவே அந்த ஆட்சியாளர்களுக்கு நேரடியாக விழுந்த அடி என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மறைமுகமாக விழுந்த பேரிடியாகும்.

குறிப்பாக பல நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு எதிராக இத்தகைய சமூக வலைத்தளங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. எனவே அமெரிக்காவைப் பொறுத்தவரை உடனடி நடைமுறை என்ற அடிப்படையிலும், தொலைநோக்கு யுத்த தந்திரம் என்ற அடிப்படையிலும் இத்தகைய சமூக வலைத்தளத்தைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். எனவே மோசமான விளைவுகள் ஏற்படுவதற்கு முன்பாக நாங்கள் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் பென்டகன் வட்டாரம் கருத்துத் தெரிவித்துள்ளது. போர்க்களங்களில் கூட மிக கடுமையான விளைவுகளை இந்த சமூக வலைத்தளங்களால் ஏற்படுத்த முடியும் என்று மதிப்பிட்டுள்ள பென்டகன், முந்தைய தகவல் புரட்சிகளால் ஏற்பட்ட விளைவுகளைப் போலவே இந்த சமூக வலைப்பக்கமும் மிகப்பெரும் விளைவு ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த சமூக வலைப்பக்கங்களை எப்படி ஒடுக்குவது என்பது குறித்து நடைமுறை சோதனை அடிப்படையில் ஆய்வு செய்யவும், அதற்காக விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் இந்த ஆய்வை மேற்கொள்ள முன்வரும்படியும் பென்டகன் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு எந்த அளவுக்கு சமூக எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியும் என்பது சந்தேகத்திற்குரியதே.

ஆனால் எந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி மூலம் உலகமயமாக்கல் என்ற மேலாதிக்க சிந்தனையை ஏகாதிபத்தியம் பரப்பியதோ, அதே தகவல் தொழில்நுட்பப் புரட்சி அந்த மேலாதிக்கத்தைத் தகர்க்கவுமான மக்கள் கருவியாக மாறி வருகிறது என்பதே இப்போதும் உறுதியாகியுள்ளது. அதை அவ்வளவு எளிதில் ஏகாதிபத்திய சக்திகளால் கட்டுப்படுத்தி ஒடுக்கிவிட முடியாது என்பதை வருங்காலம் நிரூபிக்கும்.

முடக்கத் துடிக்கும் அமெரிக்கா

இப்போது விழித்துக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா.
அந்நாட்டின் ராணுவத் தலைமையகம் பென்டகன், இந்த சமூக வலைத்தளங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதற்கு ஆய்வை முடுக்கிவிட்டுள்ளது. பென்டகனின் ஒரு துணைப் பிரிவான, அதிநவீன பாதுகாப்பு ஆய்வுத் திட்ட ஏஜென்சி (டிஏஆர்பிஏ) மூலம் இதற்காக சுமார் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம், சமூக வலைத்தளங்களில் கருத்துப் பரவலை எப்படி கண்டறிந்து முறியடிப்பது என்பதாகும். குறிப்பாகஉள்நோக்கத்தோடு பரப்பப்படும் தவறான தகவல்களை (!)” கண்டறிவது மட்டுமின்றி, அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக