திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருக்கும் சில காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கு

காங்., கட்சியினருக்கு இன்னமும் வேண்டும் : சொல்கிறார் கருணாநிதி

சென்னை:""ராஜா குற்றச்சாட்டுக்கு பிரதமரும், சோனியாவும் விளக்கம் அளிக்க வேண்டுமென ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜெயலலிதா உறவுக்காக வாய்க்கு வந்தவாறு உளறிக்கொண்டிருக்கும், காங்., நண்பர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,'' என கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை:
* பழிவாங்கும் நோக்கோடு யாரையும் கைது செய்யவில்லை என ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் எம்.எல்.ஏ.,வை, அதிகாலையில் தூக்கி வந்து எட்டு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இதில் புகார் கொடுத்தவர், 2009ல் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம், 250 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதானவர். இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது.
காவல் நிலையத்துக்கு கையெழுத்திட வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை, இன்னொருவர் புகார் கொடுத்திருக்கிறார் என கைது செய்துள்ளனர். திருவாரூரில் விபத்தில் மாணவர் இறந்ததற்கு, மாவட்டச் செயலர் தான் காரணம் என வழக்கு பதிந்து, பிரசாரத்திற்கு ஸ்டாலினோடு சென்ற நேரத்தில், வழிமறித்து அவரை கைது செய்துள்ளனர். இதையெல்லாம் பார்த்தாலே, ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கை தெரியும்.
உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி தொடரும் என தா.பாண்டியன் கூறியிருக்கிறாரே?
இதன் விளைவு தான், "தா.பாண்டியனை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியின், 30 கிளைகள் கலைப்பு; 1,000 பேர் விலகினர்' என்ற செய்தியா?
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவதில், தமிழ் ஏடுகளிடையே போட்டி நிலவுகிறதே?
ஆட்சிக்கு ஒரு கட்சி வந்ததும், அதை ஆதரிக்க இப்படி போட்டி இருக்கத்தான் செய்யும். இன்றைக்கு கூட, "தினமலர்' நாளிதழில், "கொடைக்கானல் மலை கிராமங்களில், போலீஸ் ஆசியுடன் அனுமதியின்றி மது விற்பதில் ஆளுங்கட்சியினரிடம் போட்டி உள்ளது' என்று செய்தி வந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு, இரண்டொரு ஆண்டுகளில் வரக்கூடிய கெட்ட பெயர், இந்த ஆட்சிக்கு இரண்டே மாதத்தில் வந்துள்ளது.

ராஜா கூறிய குற்றச்சாட்டுக்கு பிரதமர், சோனியா பதிலளிக்க வேண்டுமென ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?
தேர்தலுக்கு முன், "ராஜா மீது காங்., தலைவரும், பிரதமரும் நடவடிக்கை எடுத்து, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், அப்படிச் செய்தால், அ.தி.மு.க., நிபந்தனையற்ற ஆதரவு தரும்' என்று ஜெயலலிதா சொன்னார். இதே ஜெயலலிதா தான், ராஜா குற்றச்சாட்டுக்கு பிரதமரும், சோனியாவும் பதிலளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜெயலலிதா உறவுக்காக தவமிருந்து, வாய்க்கு வந்தபடி இப்போது உளறிக் கொண்டிருக்கும் ஒரு சில காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

வன்முறை, ஆபாசப் படங்களுக்கு வரி விலக்கு இல்லை என அரசு அறிவித்துள்ளதே?
ஜெயலலிதா அரசு, திரைத்துறைக்கு செய்துள்ள முதல் சாதனை இது. ஜெயலலிதா உயர்த்திய படப்பிடிப்பு கட்டணத்தை குறைத்தோம். தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு தந்தோம். அதன் பிறகும், திரைத்துறையினர் தேர்தலில், ஜெயலலிதாவை ஆதரித்தனர். அதற்கு நன்றிக்கடனாக, இரண்டே மாதத்தில் வரி விலக்கு இல்லை என்ற அறிவிப்பு. அதையும் துறை சார்ந்த சிலர் வரவேற்றிருப்பது வெட்கக்கேடு.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் செல்கிறார் கருணாநிதி:திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ததைக் கண்டித்து, வரும் 6ம் தேதி, திருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி உரையாற்றுகிறார் என, திருவாரூர் மாவட்ட தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக