வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி

ஜெர்மனி, பிரான்ஸ் அதிபர்கள் ஆலோசனை தோல்வி
euro-crash-200பெர்லின் : "யூரோ' கரன்சி பயன்படுத்தும் நாடுகளின் கடன் சுமை குறித்து நேற்று முன்தினம், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், எதிர்பார்த்த அம்சங்கள் எதுவும் இல்லாததால், நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.

"யூரோ' கரன்சி பயன்படுத்தும் 17 நாடுகளின் கூட்டமைப்பில் வலுவான பொருளாதார நாடாக உள்ள ஜெர்மனி, முடிவடைந்த காலாண்டில், எதிர்பார்த்த 0.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டவில்லை. மாறாக, 0.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததாக, நேற்று முன்தினம் அந்நாட்டு புள்ளியியல் துறை அறிவித்தது. அதேபோல், பிரான்ஸ் தனது கடன் மதிப்பீட்டுக் குறியீடான "ஏஏஏ'யை இழந்து விடும் என தகவல்கள் பரவின. இச்சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லும், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும் இரண்டு மணி நேர அவசர ஆலோசனை நடத்தினர்.
இத்தாலி நிதியமைச்சர் கிலியோ ட்ரமொன்டி, பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் இருவரும், "யூரோ' பயன்படுத்தும் 17 நாடுகளுக்கும் பொதுவான ஒரு கடன் பத்திரத்தை உருவாக்குவதன் மூலம், கடன் சுமையில் திணறும் நாடுகள் அதிலிருந்து மீள முடியும் என, ஆலோசனை கூறினர். அவர்களின் ஆலோசனை குறித்து இரு நாட்டு அதிபர்களும் கலந்தாலோசிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆலோசனை முடிந்த பின் மெர்க்கெல்லும், சர்கோசியும் இணைந்து விடுத்த அறிக்கையில், 17 நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார நிர்வாகம் உருவானால் தான் கடன் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று தெரிவித்தனர். அதோடு, பொதுவான கடன் பத்திரம் தற்போதைக்கு சாத்தியமில்லை என்று கைவிரித்து விட்டனர். இவர்களின் ஆலோசனையில் எதிர்பார்த்த முடிவுகள் வெளிவராததால், நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. நாடுகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையால், வங்கிகளின் பங்குகளும் சரிந்தன.
என்ன முடிவுகள்?
ஜெர்மனி, பிரான்ஸ் அதிபர்கள் இருவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள்:
* "யூரோ' நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தேவை.
* ஐரோப்பிய கவுன்சில் தலைவர் தலைமையில் ஆண்டுக்கு இருமுறை "யூரோ' நாடுகள் மாநாடு நடக்க வேண்டும்.
* அடுத்தாண்டின் மத்தியில் இருந்து 17 நாடுகளும் தங்கள் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் விதத்தில் சமச்சீர் பட்ஜெட்டுக்கான அரசியல் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
* நாடுகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு வரி விதிக்கலாம். அந்த வரிப்பணத்தை, கடன் சுமையில் தவிக்கும் நாடுகளுக்கு தவணையாக அளிக்கலாம்.
* தற்போதைய நிலையில் 17 நாடுகளுக்குமான பொது கடன் பத்திரத்தை உருவாக்க இயலாது. ஒருங்கிணைந்த பொருளாதார நடவடிக்கையின் இறுதியிலேயே அந்த நடவடிக்கையை எடுக்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக