திங்கள், 1 ஆகஸ்ட், 2011

தோழா...தோழா...தோள் கொடு; கொஞ்சம் சாய்ஞ்சுக்கணும்.! : "நட்பு தினத்தில்' நண்பர்களின் பாசப் பரவசங்கள்

கற்பென்பதை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம், என்றான் பாரதி. அந்த வரிசையில் நட்பையும் சேர்த்துக் கொள்வோம். ஆணும், ஆணும்... பெண்ணும், பெண்ணும் கொள்வது மட்டும் நட்பல்ல. ஆணும், பெண்ணும் இயல்பாக பழகுவதும் நட்பு தான். நட்பு என்பது மனதுக்கு தரும் மரியாதை. இதமான தோழமையும், இறைவனும் ஒன்று தான். அங்கே சரணாகதி அடையலாம். நட்பின் புனிதம் காக்கப்படும். பொருள் கொடுப்பதல்ல... பொறுமையாய் நமது உணர்வுகளுக்கு வடிகால் தருவதே உன்னத நட்பு. நீரற்ற குளத்தில் பறவைகள் தங்காது. பொருளற்ற சூழ்நிலையில் உறவுகள் தங்காது. எதுவுமற்ற நிலையிலும் நல்ல நட்பு மட்டும் மாறாது. இங்கே மனதோடு மட்டுமே மனம் பேசும். "உலக நட்பு தினமான' இன்று உறவுகள் பேசும் சுகமான

பகிர்வுகள் இதோ...
பாலாஜி (டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர், மதுரை): என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும், உயிர்த் தோழனாக நினைப்பது செயின்ட் பீட்டர் பள்ளித் தாளாளர் சாம் பாபுவைத் தான். நான் வேலையில்லாமல் சோர்வாக திரிந்த நேரத்தில், என் விளையாட்டுத் திறமையை புரிந்து கொண்டு, பள்ளியில் பயிற்சியாளர் ஆக்கினார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் பயிற்சிக்கு பின், தேசிய விளையாட்டு நிறுவனத்தில் (என்.ஐ.எஸ்.,) கூடுதல் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். என் வாழ்க்கைப் பாதையை மாற்றி, விளையாட்டே வாழ்க்கை என்பதை உணர வைத்ததை வாழ்நாளில் மறக்க முடியாது. நண்பனாகவும், குருவாகவும் வழிகாட்டும் அவரது நட்பு ஆயுசுக்கும் தொடரவேண்டும்.

பைசல் அகமது (ஜி.டி.என்., கல்லூரி மாணவர், திண்டுக்கல்): பள்ளிப்பருவத்திலிருந்தே நான், சாம்சுந்தர், சின்னத்தம்பி மூவரும் நண்பர்கள். கல்லூரி சேர்க்கைக்கு தாமதமாக சென்றிருந்தேன். அதற்குள் கல்லூரி முதல்வரிடம், என் விளையாட்டு திறமையை நண்பர்கள் எடுத்து கூறியதால், சேர்க்கை கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடந்து செல்லும் போது தகரத்தில் மோதி விழுந்தேன். கையில் ரத்த போக்கு அதிகமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில், சாம்சுந்தர் ரத்தம் கொடுத்து காப்பாற்றினார். குடும்பம் பணக்கஷ்டத்தில் திணறிய போது சின்னத்தம்பி, பண உதவியும், பகுதி நேர வேலைக்கும் ஏற்பாடு செய்தார். இதை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். நண்பர்கள் வளர்ச்சி அடையும் போது பொறாமை படாமல், உற்சாகப்படுத்தினால், நட்பும், கற்பை போல பெருமைக்குரியதாகி விடும்.

காரிச்சாமி (கம்மவார் கல்லூரி மாணவர், தேனி): பள்ளியிலிருந்து கல்லூரி வரை நண்பர்கள் மூன்று பேர் ஒன்றாக படிக்கிறோம். சில மாதங்களுக்கு முன், என் நண்பரை பாம்பு கடித்து விட்டது. இரண்டு கி.மீ., தூரம் ஆஸ்பத்திரிக்கு தோளில் தூக்கிக் சென்றோம். தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார்.
ஒரு செட் புத்தகத்தை வாங்கி, மூன்று பேரும் சேர்ந்து படிக்கிறோம். இப்போது படிப்பது மூன்றாமாண்டு. புத்தகம் வாங்குவது, கல்லூரி கட்டணம் கட்டுவது, சாப்பிடுவது, உடைகள் மாற்றுவது போன்ற எல்லாவற்றிலும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கிறோம். எங்களுக்குள் நல்ல புரிதல் உணர்வு உண்டு. இந்த பிறவி முழுக்க நீடிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறோம்.

ஜெனி (தனியார் நிறுவன ஊழியர், ராமநாதபுரம்) : தந்தையின் எலக்ட்ரானிக் ÷ஷாரூமில் வேலை செய்கிறேன். பிளஸ் 1லிருந்து எனது நெருங்கிய தோழி ஜெகதா. ஆசிரியராக வேலை பார்க்கிறார். பிளஸ் 2 ல் எனது சந்தேகங்களை தீர்த்து, அதிக மதிப்பெண் பெற உதவினார். பிளஸ் 1ல் ஒருமுறை காய்ச்சல் வந்து, பள்ளியில் மயங்கி விழுந்தேன். விடுப்பு எடுத்து என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு, இரண்டு நாள் என் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். இப்போதும் உடல் நலம் சரியில்லை என்றால், வீட்டுக்கு வந்து விடுவார். அவளுக்கு தெரிந்தவர்களிடம் எங்கள் கடையில் பொருட்களை வாங்க சொல்லுவார். எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யும் அவளுக்கு என்ன கைமாறு செய்வேனோ?

வித்யா (ஆசிரியை, காரைக்குடி): கஷ்டப்படும் போது நம்முடன் இருப்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள். இன்றுவரை எனக்கு நெருக்கமான தோழி கமலா தான். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், குடும்ப சூழ்நிலையால் வங்கியில் கடன் வாங்கினேன். ஒரு சில காரணங்களால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானேன். உற்றார், உறவினர் இருந்தும் எனக்கு யாரும் பண உதவி செய்யவில்லை. அப்போது தான் என்மீது கமலா வைத்திருந்த உண்மையான அன்பு புரிந்தது. எதையும் எதிர்பார்க்காமல் கடனை திருப்பி அடைக்க உதவினார். இதை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. இதையடுத்து, இருவரின் குடும்ப விசேஷங்களில் இணை பிரியாமல் பங்கேற்று வருகிறோம். தற்போது ஒரே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிவது நாங்கள் செய்த பாக்கியம்.

ரம்யா (வன்னியப்பெருமாள் கல்லூரி மாணவி, விருதுநகர்): கல்லூரித்தோழி சவும்யா, கேரளாவைச் சேர்ந்தவர். காதலுக்கு மட்டுமல்ல... நட்புக்கு மதம், மொழி எதுவும் கிடையாது, என்பதை புரியவைத்தவள். ஒரு முறை உடல்நலம் குன்றிய போது என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று நான் சரியாகும் வரை, அருகிலேயே இருந்து கவனித்து கொண்டார். தோழியின் அரவணைப்பில் விரைவில் குணமடைந்தேன். கல்லூரியில் மட்டுமல்ல, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இருவரும் இணை பிரியாமல் செல்கிறோம். இது தொடரவேண்டும் என்பதே ஆசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக