சனி, 6 ஆகஸ்ட், 2011

டக்ளஸ் சம்பந்தனுக்கு அறிவுரை இருண்ட வீட்டிற்குள் கறுப்பு பூனையை தேட முடியாது!

தமிழ் மக்கள் சார்பாக உண்மையை பேசவேண்டும் என்பதற்காக தமது பக்கம் வருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் என்னையும் அழைத்திருப்பது வேடிக்கையானதொரு கூற்றாகும். இது இருண்ட வீட்டிற்குள் இருந்து கொண்டு கறுப்பு பூனையை தேடிக் கண்டு பிடிக்க என்னையும் வருமாறு கேட்பது போல் இருக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் எது உண்மை?...
சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போகின்றார்கள் என்று நீங்கள் கூறியது உண்மையா?.

அல்லது, இடிந்து சிதைந்து போன சங்கிலியன் சிலையை நாம் சொன்னது போலவே இன்று புதிதாக கட்டி நிமிர்த்தியிருக்கும் நாங்கள் சொல்வது உண்மையா?... .
உண்மையை பேசுவது யார்?... நாங்களா?... அல்லது நீங்களா?... நீங்கள் அரசாங்கத்தின் பின்கதவு தட்டி அரச உயர் மட்ட பிரதிநிதிகளோடு கனிவாகவும், குழைவாகவும் பேசி உங்கள் சொந்த சலுகைகளை மட்டும் பெறுவதற்காக கூறிவரும் கருத்துக்களை உண்மை என்று ஏற்பதா?...


அல்லது தேர்தல் காலங்களில் வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்காக எமது மக்கள் மத்தியில் அரச எதிர்ப்புக் காட்டும் உங்களது சுயலாப வீரப்பேச்சுக்களை உண்மை என்று ஏற்பதா?.... இதில் எது உண்மை?... எம்மை பொறுத்தவரையில் அங்கொரு பேச்சும், இங்கொரு பேச்சும் ஒரு போதும் இருந்ததில்லை. எமது மக்கள் மத்தியில் எதை நான் பேசுகின்றேனோ அதையே அரசாங்கத்திடமும் பேசி வருகின்றேன்.
எமது மக்களின் அன்றாட அவலங்களுக்கான தீர்வு முதற்கொண்டு அபிவிருத்திப்பணிகள் மற்றும் அரசியல் தீர்வு குறித்த விடயங்களையே நான் அரசாங்கத்துடன் இணக்கமாகப் பேசி அதில் எமது அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் முடிந்தளவு வெற்றிகளையும் ஈட்டி வந்திருக்கின்றேன்.

இது தவிர உங்களைப் போல் எமது சொந்த சலுகைகளுக்காக அரச உயர் மட்டப் பிரதிநிதிகளின் முன்பாக கை கட்டி குனிந்து வளைந்து நின்று ஒரு போதும் எதையும் நாம் கேட்டதில்லை.
அர்த்தமற்ற அரச எதிர்ப்பு அறிக்கைகளை அடிக்கடி வெளியிட்டாலும், அதே அரசுடன் பேசித்தான் எமது மக்களுக்கான சகல பிர்ச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இதை உணர்ந்துதான் நாம் அரசாங்கத்தோடு வெளிப்படையாகவே கை குலுக்கி இணக்கமாகப் பேசி எமது மக்களுக்காக வாதாடியும், உண்மைகளை எடுத்துரைத்தும் வருகின்றோம்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினையை சுமுகமாக பேசித்தீர்ப்பதற்கு மாறாக அதை வைத்து எமது இன சமூகத்தின் இரத்தங்களை சூடேற்றி வாக்குகளை மட்டும் அபகரித்து வருவதும், தேர்தல் காலங்களில் பொய்களும், புரட்டுக்களுமாக பரப்புரை செய்து எமது மக்களை தவறாக வழி நடத்தி அவர்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களின் ஆணையை பெற்று விட்டதாக பெருமிதம் கொள்ளவதுமே உங்களது அரசியலாக இருந்து வருகின்றது.
இது வரை நீங்கள் தமிழ் மக்களை ஏமாற்றி பெற்று வந்த அரசியல் அதிகாரங்களை வைத்து எதை சாதித்தீர்கள்?... உரிமையை பெற்று கொடுத்தீர்களா?... அல்லது உரிமை கிடைக்கவில்லை என்று உங்களால் ஏமாந்த மக்களுக்கு ஒரு வேளை உணவாவது கொடுத்தீர்களா?...


77 இல் தனி நாடு பெற்றுத்தருவோம் என்று ஆணை கேட்ட நீங்கள் 18 ஆசனங்களை பெற்றீர்கள். தமிழ் மக்களை இரத்த வெள்ளத்தில் தவிக்க விட்டு நீங்கள் மட்டும் இந்தியாவிற்கு ஓடிச்சென்று தமிழ் நாட்டில் தனிவீடு பெற்று உங்கள் குடும்பங்களோடு குதூகலித்து வாழ்ந்தீர்கள்.
தமிழர்களில் ஒற்றுமையை உலகுக்கு காட்டுமாறு கோரி 2004 இல் 22 நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றீர்கள். இதனால் எமது மக்களுக்கு நீங்கள் பெற்றுத்தந்தது என்ன?... முள்ளிவாய்க்கால் படுகுழி வரை எமது மக்கள் இழுபட்டு செல்வதற்கு துணை போய், அதை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தீர்கள்.

ஆகவே, உண்மையை பேசவும், உரிமையை பெறவும் நீங்கள்தான் சரியான திசை வழிக்கு வந்து சேரவேண்டியவர்களே அன்றி நாமல்ல. எமது மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்கு நாம் சொல்வதை விடவும் நடைமுறைச் சாத்தியமானதொரு பாதையை நீங்கள் காட்டுவீர்களேயானால் அதை நோக்கி நாம் வருவதுபற்றிப் பரீசீலிப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

ஆனால் நீங்கள் காட்டும் திசை வழி என்பது தமிழ் மக்களை இன்னொரு அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவே வழி வகுக்கின்றது.


எமது அரசியலுரிமை பிரச்சினையை தீராப்பிரச்சினையாக இன்னமும் நீடித்து செல்லும் இருண்ட திசையினையே உங்கள் வழிமுறை காட்டி நிற்கிறது.

புழுக்கள் நெழியும் சாக்கடைக்குள் இருந்து நீங்கள் ஒருபோதும் விடுபட்டு வரத்தயாரில்லை என்பதே உங்கள் வரலாறு.

வாக்குகளை மட்டும் அபகரிப்பதற்கான வெறும் தேர்தல் கூட்டு முயற்சிகளை நாம் அடியோடு வெறுக்கின்றோம்.

ஆனாலும், தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து பொது உடன்பாட்டு தளத்தில் இருந்து அரசாங்கத்துடன் பேசுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை நோக்கி கருத்து தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் அடைவதற்கான உண்மையான வழிமுறை எது என்பதை வரலாறு நிரூபித்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக