சனி, 6 ஆகஸ்ட், 2011

சென்னையில் இலங்கையர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை யாத்திரிகர்கள் சிலர் சென்னையில் அச்சுறுத்தப்பட்டதையடுத்து சென்னைக்குச் செல்லும் இலங்கை சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எக்மோரின் கென்னத் லேனிலுள்ள மஹாபோதி நிலையத்தைச் சூழ ரோந்து நடவடிக்கைகளை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர். அத்துடன் எல்.ரி.ரி.ஈ. அனுதாபிகள் மற்றும் இலங்கையர்களின் செயற்பாடுகளை கண்காணித்துவரும் கியூ பிரிவினரும் பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கையர்கள் அதிகமாக செல்லும் தி.நகர் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மஹாபோதி நிலையத்தைச் சேர்ந்த வண. மஹாநாம தேரர் இது தொடர்பாக கூறுகையில், "இப்போது அமைதி நிலவுகிறது. பொலிஸாரின் பிரசன்னத்தையடுத்து யாத்திரிகர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர். கியூ பிரிவினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தாக்கப்பட்ட குழுவினர் இன்று கொழும்புக்கு புறப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி திருப்தி தெரிவித்துள்ளார். "மேற்படி சம்பவம் துரதிஷ்டவசமானது. இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியமைக்காக தமிழ் நாடு அரசாங்கத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்" என அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக