வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

உயிருடன் இருந்தவரை இறந்ததாக் கூறி காணி விற்பனை மோசடி

உயிருடன் இருந்த வயோதிபரை இறந்ததாக் கருதி 5 பரப்புக் காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து பல இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தவர்களின் மோசடிச் சம்பவம் ஒன்று யாழில் இடம் பெற்றுள்ளது.

போலி உறுதிமுடித்தவரும் காணியை விலை கொடுத்து வாங்கியவரும் காணியை முதியவரிடம் கையளித்து விலகிக்கொண்ட சம்பவம் வலி.கிழக்குப் பிரதேச மத்தியஸ்தர் சபையில் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வலி. வடக்கில் முதியவருக்குச் சொந்தமாகவுள்ள 5 பரப்புக் காணியை தென்மராட்சியிலுள்ள பிரபல நொத்தாரிசு ஒருவரின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் கைமாற்றிக் கொண்டனர்.

முதியவர் தனது காணி தனக்குத் தெரியாமல் உறுதி எழுதி கைமாறியிருப்பதை அறிந்து வலி. கிழக்கப் பிரதேச மத்தியஸ்தர் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டு விசாரணையின் போது முதியவரை இறந்து விட்டதாகக் கூறி உரிய 5 பரப்புக் காணி விற்பனை செய்யப்பட்டதுடன் இதற்கு தென்மராட்சியைச் சேர்ந்த பிரபல நொத்தாரிசு உறுதி எழுதியதும் தெரியவந்துள்ளது.

உயிருடன் இருக்கும் முதியவரை இறந்ததாகக் கூறியது மற்றும் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் காணியை கைமாற்றியது, போலியான உறுதி எழுதியது என்பன மோசடிக் குற்றச்சாட்டில் கடும் தண்டனைக்கு உரியமையை உணர்ந்து முதியவரிடம் கையளிப்பதற்கு இணங்கிய நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் விலகிக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக