செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மீன் விற்கும் முருகன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நூல்களை

மீன் விற்கும் முருகன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நூல்களை மொழிபெயர்க்கிறார்.


இரைச்சலும் கவிச்சியுமாய் பரபரப்புடன் இயங்குகிற ஜாம் பஜார் மீன் சந்தை. அங்கே பெரு.முருகனின் பெயரைச் சொன்னால் போதும். சக வியாபாரிகள் அவரது கடைக்குச் சட்டென்று அடையாளம் சொல்கிறார்கள், ‘எப்பவும் ஏதாச்சும் எழுதிட்டிருக்குமே, அந்தத் தம்பிதானே?’ முருகன் தமிழ் இலக்கியத்துறையில் வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. மீன் விற்கும் முருகன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு நூல்களை மொழிபெயர்க்கிறார்.

‘என்னப்பா, வஞ்சிரம் இன்னிக்கு வரலையா? சங்கரா விலை இவ்வளவு அதிகமா இருக்கே?’ என்ற கேள்விகளுடன் சூழ்ந்து நிற்கும் வாடிக்கையாளர்களுக்கு மீனைத் தராசில் நிறுத்துக்கொடுத்துவிட்டு, முருகன் நம்மிடம் வருகிறார். ”நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் இதே ஜாம் பஜாரில்தான். மீன் விற்கிறது எங்க குடும்பத் தொழில். குடும்பத்துல கல்லூரிக்குப் போய் படிச்ச முதல் ஆளே நான்தான். சென்னை பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் எம்.ஏ., முடிச்சேன். துறைமுகத்துல அரசு வேலைக்காக முயற்சி செஞ்சேன். அது கிடைக்கலை. குடும்பத் தொழிலையே செய்வோம்னு மீன் விற்கிற தொழிலில் இறங்கிட்டேன். அம்மா, தம்பி, அக்கா கூட சேர்ந்து நானும் வியாபாரம் பண்றேன்’’ என்கிறார் முருகன்.

மீன் விற்கும் திண்ணைக்கு அருகிலேயே ஐந்துக்கு ஐந்து பரப்பளவில் அறை வைத்திருக்கிறார் முருகன். அதில் ஷெல்ஃபில் சதத் ஹசன் மாண்டோ, சுந்தர ராமசாமி, ஒரான் பாமுக் போன்றோரின் புத்தகங்கள் அடுக்கப்பட்டுள்ளன. ”பல்கலைக்கழகத்தில் படிக்கிறப்போ ஆங்கில மீடியத்தில்தான் படிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் கத்துக்குறதுக்காக சின்னச் சின்ன நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பழகினேன். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டப்போ, ஆங்கிலத்தில் உள்ள நல்ல படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தால் என்னனு தோணுச்சு. முழு மூச்சாக மொழிபெயர்ப்பில் இறங்கினேன்’’ என்று மொழிபெயர்ப்பில் நுழைந்ததைச் சொல்கிறார்.

‘‘ட்ரெனா பால்ஸ் என்ற பிலிப்பைன்ஸ் எழுத்தாளர் எழுதிய ‘போப் ஃபார் த ஃப்ளவர்ஸ்’ என்ற பிரபலமான குழந்தைகள் சிறுகதையை ‘பூப்பூவாய்’ என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். கிரேக்க காவியமான ஒடிஸியை எழுதிய ஹோமரின் இன்னொரு படைப்பான ‘பெட்சைட் ஒடிசி’யை ‘பள்ளியறை ஒடிசி’ என்று தமிழ்ப் படுத்தியிருக்கிறார். அடுத்து உம்பர்டோ ஈகோவின் ‘நேம் ஆஃப் தி ரோஸ்’ புத்தகத்தை தமிழ் படுத்தப் போகிறாராம். அவர் சொல்லும் படிக்கும் புத்தகங்கள் பிரமிக்க வைக்கின்றன.

முருகனின் மனைவி ரேகா பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரே ஒரு மகன்தான். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். ‘‘நிரந்தர வருமானம் வர்ற மாதிரி எழுத்துத் துறையிலேயே வேலை தேடிட்டிருக்கேன். அப்படி கிடைச்சா மீன் விற்கும் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்’’ என்கிறார் முருகன்.

இலக்கியத்தை நம்பி, நல்ல வேலைகளை உதறிவிட்டு, அவதிப்பட்ட பல இலக்கிய ஜாம்பவான்கள்தான் நம் ஞாபகத்துக்கு வந்தார்கள். ‘ஜாக்கிரதை தலைவா’ என முருகனை சினேகத்துடன் எச்சரித்துவிட்டு வந்தோம்.

ஆனந்த் செல்லையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக