செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!

மூவர் தூக்கு ரத்து: பாசிச ஜெயா மறுப்பு!
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று திமிராக பேசிய இந்த நரி எப்படி தீடீரென்று பரியாக முடியும்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கிலடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சீமான், வைகோ, பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் முதலான தமிழின ஆர்வலர்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்காக ஜெயவிடம் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.
கோயம்பேட்டில் நடக்கும் வழக்கறிஞர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களும், திரைத்துறையினரும் கூட இப்படித்தான் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து பேசி வருகிறார்கள். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் மூவர் தூக்கை ரத்து செய்ய போராடுவதற்கு பதில் இப்படி ஜெயலலிதாவிடம் விசேடமாக கோரிக்கை வைப்பது சரியா? கேட்டால் இது மூவரது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதில் நமது மான அவமானத்தை பார்க்க்க் கூடாது என்றும் நியாயப்படுத்துகிறார்கள்.
மூவரையும் தூக்கில் போடவேண்டுமென்று எப்போதும் பேசி வரும் ஜெயாவிடம் எதை எதிர்பார்த்து இந்தக் கோரிக்கை? “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று திமிராக பேசிய இந்த நரி எப்படி தீடீரென்று பரியாக முடியும்?
தற்போது இந்தப் பிரச்சினை தொடர்பாக ஜெயாவே தனது முகம் இதுதான் என்று காட்டியிருக்கிறார். தமிழின ஆர்வலர்கள் வெட்கப்படாமல் அதை பார்ப்பார்களா?
தனக்கு அதிகாரமில்லை என்பதை சட்டபூர்வமாக மெனக்கெட்டு சொல்லியிருக்கிறார். அதிலும் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்ட நிலையில், புதிய சூழ்நிலை, ஆதாரங்கள் இருப்பின் அதை மறு ஆய்வுக்குட்படுத்துமாறு சம்பந்தப்ட்டவர்களோ, வேறு யாரோ குடியரசுத்தலைவரிடம் கோரலாம் என்பதையும் கூறியிருக்கிறார். அந்த வேறு யாரோவில் ஏன் புரட்சித் தலைவி இல்லை? ஏன் தமிழக அரசு இல்லை?
கருணாநிதி அமைச்சரவை கருணை மனைவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு ஆலோசனை கூறியது நிஜம்தான். அதனால் இன்று தூக்குத் தண்டனையை நிறுத்துமாறு கருணாநிதி கோருவது பித்தலாட்டம் என்பதையும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் ஈழப்பிரச்சினையில் கருணாநிதியின் துரோகத்தை ‘புரிந்து’ கொண்டு அவரை எதிர்த்தவர்கள்தானே வைகோவும், சீமானும், பெரியார் தி.கவும்? அதனால்தானே ஈழத்தின் எதிரி ஜெயாவை அவர்கள் தேர்தலில் ஆதரிக்கவும் செய்தார்கள். அந்த அடிப்படையில்தானே ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்கிறார்கள்? அதை ஏற்பதில் என்ன பிரச்சினை?
இந்த நெடிய அறிக்கையில் முதலமைச்சரான தனக்கு அதிகாரம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால் குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து விட்ட நிலையிலும் தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்பதை சிலர் கூறுகிறார்கள். அதற்கு நம்பூதிரிபாடு, சி.என்.அண்ணாத்துரை போன்றோர் முதலமைச்சராக இருந்த போது நடந்த வரலாற்றினையும் கூறுகிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.
தனக்கு அதிகாரமில்லை என்பதை இப்படி மாய்ந்து மாய்ந்து சொல்லும் பாசிச ஜெயலலிதா மூவர் தூக்கிலடப்படுவதும் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூட ஏன் சொல்லவில்லை? தனக்கு அதிகாரமில்லை என்றாலும் மூவர் தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்று தான் விரும்புவதாக ஏன் கூறவில்லை?
இல்லை குடியரசுத் தலைவருக்கு தமிழக போராட்ட நிலைவரங்களை அறிக்கை மூலம் தெரிவித்து அவரது முடிவை மறு ஆய்வு செய்யுமாறு ஏன் கோரவில்லை? இதற்கு கூட அதிகாரமில்லையா, இல்லை மனமில்லையா? காவிரிப் பிரச்சினையில் கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை இன்று வரை கருநாடக அரசு அமல்படுத்த மறுக்கிறது. இதினாலொன்றும் அரசியல் சட்டப்பிரச்சினைகள் வந்துவிடவில்லை. அதே போல மூவரை தூக்கில் போட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியாது என்றும் அதனால் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கலாமே?
கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ததும், அதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர்களை வைத்து வாதடியதாகட்டும் அந்த ஈடுபாடு இந்த மூவர் மீதான உயிர் குறித்து ஏன் இல்லை? புதிய சட்டசபை அலுவலகத்தை மருத்துவமனையாக்க போகிறேன் என்று மக்கள் பணத்தோடு விளையாடும் ஜெயலலிதா மூன்று பேரின் உயிர் குறித்தும் அதேமாதிரிதான் விளையாடுகிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
மேலும் மூவர் தூக்கை ரத்து செய்யுமாறு வந்த கோரிக்கைகளை அவர் பத்திரிகைகள் மூலம்தான் அறிந்து கொண்டாராம். அன்றாடம் பல்வேறு ஊர்களில், கல்லூரிகளில் நடக்கும் போராட்டங்களும், ரயில் மறியலும் குறித்து உளவுத் துறை போலீசு அவருக்கு சேதி சொல்லவில்லையா?
மூவரையும் தூக்கில் போட வேண்டுமென்று முந்தாநாள் வரை நரம்பு புடைக்க பேசியவரிடம் ஏன்தான் இந்த தமிழின ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள் என்று தெரியவில்லை? 2000-ஆம் ஆண்டு  கருணாநிதி கூட கருணை மனுவை நிராகரிக்குமாறு சொல்தவற்கு பாசிச ஜெயாவின் மீதான பயம்தான் முதன்மைக் காரணம். அதுவே பின்னர் சீமானைக் கைது செய்வதற்கும் காரணமாக இருந்தது. பாசிச ஜெயா தலைமையிலான பார்ப்பனக் கூட்டத்திற்கு பயந்து கொண்டுதான் கருணாநிதி ஈழம் தொடர்பான விவகாரங்களில் நடந்து கொண்டார் என்பது ஊரறிந்த விசயம்.
ஆக பாசிச ஜெயா ஒரு போதும் ஈழத்திற்காகவோ, மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காகவோ குரல் கொடுக்க மாட்டார். இனியாவது தமிழின ஆர்வலர்கள் தமது கோரிக்கைகளை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் வைத்து போராடட்டும். சொல்லப் போனால் இந்த மூவரையும் எப்படியாவது தூக்கில் போட வேண்டும் என்று குறியாக இருப்பவர்தான் இந்த பாசிச ஜெயா. நம்மைக் கொல்ல வரும் கொலைகாரனிடமே நம்மைக் கொல்ல வேண்டாமென்று மன்றாடுவது என்ன வகை அரசியல்?
இன்னும் ஆதாரம் வேண்டுமா?
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதா பேசியதைப் பாருங்கள்:
“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி பொய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.
தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”
- புரட்டுத் தலைவி ஜெ. ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர் 23.10.2008)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக