புதன், 10 ஆகஸ்ட், 2011

லண்டன் கலவரம் பிற நகரங்களுக்கும் பரவியது

britain riotsலண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம், கொள்ளை, மூன்றாவது நாளான நேற்று நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உடனடியாக நாடு திரும்பினார். பார்லிமென்ட்டை அவசரமாக கூட்டி, ஆலோசனை நடத்தினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியை சேர்ந்த மார்க் டக்கன், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சாவுக்கு நீதி கேட்டு, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. இதையடுத்து, டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், ஏ.டி.எம்., இயந்திரங்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன. டோட்டன்ஹேம் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், டோட்டன்ஹேமில் ஏற்பட்ட கலவரம் படிப்படியாக, லண்டனின் பிறபகுதிகளுக்கும் பரவியது. பார்க்கும் இடங்களில் எல்லாம், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், ஏ.டி.எம்., இயந்திரங்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்ததுடன், அடித்து நொறுக்கினர். சாலைகளில் சென்ற வாகனங்கள் குறிப்பாக, போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில், முகமூடி அணிந்த நபர்கள், கும்பல் கும்பலாக, கடைகளில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆயுதந்தாங்கிய பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மார்க் டகனின் மரணம் குறித்தும் ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவரது மரணமே டோட்டனம்ஹாமில் முதலில் வன்செயல் ஆரம்பிக்க காரணமானது. மார்பில் துளைத்த ஒற்றை துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் அவர் உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யார் இந்த மார்க் டக்கன்? : லண்டனின் வடக்கில் பிரபல தாதாவாக வலம் வந்தவன் மார்க் டக்கன், 30. இவனது பெற்றோர் பிரிட்டன் - ஆப்ரிக்க தம்பதியினர். துவக்க காலத்தில், நண்பர்கள் சகிதமாக, வார இறுதி நாட்களில் மட்டும் லண்டன் தெருக்களில் அடிதடியில் இறங்கி, சாகசம் காட்டி வந்த டக்கன், அதன்பின் வன்முறையை முழு நேர வாழ்க்கையாக மாற்றிக்கொண்டான். ஒரு கட்டத்தில், லண்டனின் பிரபல தாதாக் குழுக்களுக்கு துப்பாக்கி மற்றும் போதைப் பொருட்கள் சப்ளையராக மாறியவன், போலீஸ் கண்காணிப்பில் சிக்கினான். கடந்த 4ம் தேதி, லண்டனில் உள்ள டோட்டன்ஹேமில் மார்க் டக்கனை போலீசார் சுற்றி வளைத்தனர். சரணடைய மறுத்த மார்க், ஹாலிவுட் படத்தில் வருவது போல், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டான். இதையடுத்து, போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
பிரிட்டனில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது.
* கலவரத்தின் மையப்புள்ளியான டோட்டன்ஹேம் உட்பட ஹாக்னே போன்ற பகுதிகளில், ஆப்ரிக்கர்கள், சீனர்கள், துருக்கியர்கள் என, பல நாடுகளை சேர்ந்த ஏழை மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
* டோட்டன்ஹேமில் மட்டும், 10 ஆயிரம் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* கிரீஸ் உட்பட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. இதனால், மாணவர்களுக்கு கல்விச் சலுகைகள் நிறுத்தப்படவே, கடந்த சில மாதங்களாக பிரிட்டன் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
* "நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அடிப்படை வசதிகள் அனைவருக்கும் வேண்டும் என, கேள்வி கேட்டவர்களுக்கு, எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த வாய்ப்பு தான் மார்க் டக்கன் கொலை, அதைத் தொடர்ந்த கலவரங்கள்' என டோட்டன்ஹேம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக