புதன், 24 ஆகஸ்ட், 2011

சுழிபுரப் பகுதியில் காணாமற்போன 8 வயதுச் சிறுமி பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு!

கடந்த 17ஆம் திகதி புதன்கிழமை சுழிபுரப் பகுதியில் காணாமற்போன 8 வயதுச் சிறுமியின் சடலம் சுழிபுரம் மத்தியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஏழுநாள்களின் பின்னர் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பாண்டாவெட்டை காட்டுப்புலம் மகா வித்தியாலயத்தில் கற்கும் கிருஷ்ணமூர்த்தி சாலினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுமி காணாமற்போனது குறித்து வட்டுக்கோட்டை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த சிறுமியின் சடலம் அவரின் வீட்டில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டு வளவில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே இந்தச் சடலம் குறித்த விடயம் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாகம் நீதிமன்ற நீதிவான் எஸ். கஜநிதிபாலன் மேற்கொண்ட விசாரனைகளை அடுத்து இந்தச் சடலம் காணமற்போன சிறுமி சாளினியினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சடலம் உருக்குலைந்த நிலையில் மிக மோசமாக அழுகி சிதைந்திருந்தது. இடுப்புப் பகுதிக்கு கீழ் ஆடைகள் எதுவும் காணப்படவில்லை. தலையின் பின்பக்கம் பெரிய துவாரம் ஒன்று இருந்தது. நீதிவானின் விசாரனைகளைத் தொடர்ந்து சடலம் வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை வட்டுக்கோட்டை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக