செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இந்தியா இலங்கையிடமிருந்து 80 போர்ப்படகுகளை கொள்வனவு செய்யும்

இலங்கையிடம் இருந்து 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.

250 கோடி ரூபா பெறுமதியான இந்த உடன்பாட்டு கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியக் கடற்படையில் அண்மையில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப்பிரிவுக்காகவே இந்தப் படகுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி இலங்கை கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது.

சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கே இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் படகுகளை இலங்கையின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்கள் கட்டிக் கொடுக்கவுள்ளது.

இலங்கை கடற்படையின் சிறப்புப் படகு அணியை சேர்ந்த 42 கொமாண்டோக்கள் சில மாதங்களுக்கு முன்னர் மும்பைக்குச் சென்று இந்திய கடற்படையினருடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக