ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

காணாமற்போனோரைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி 6 பேரிடம் 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபா மோசடி

காணாமற்போனோரைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி 6 பேரிடம் 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபா மோசடி செய்த வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையுடன் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு காணாமற்போனோரை கண்டறிந்து மீட்டுத்தருவதாகக் கூறி 6 பேரிடம் 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபா பணத்தை வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே சம்பந்தப் பட்ட பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் திறந்த நீதிமன்றில் நேற்று யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இருப்பினும் பணத்தை மீள கட்டமுடியாது எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பணமோசடி செய்த குற்றச்சாட்டுக்காக 2 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் பணத்தை சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய குற்றத்துக்காக 2 வருட சாதாரண சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக