சனி, 30 ஜூலை, 2011

பதவிக்கு அடிபிடி VVT நகரசபைத் தலைவர் நியமனம்சிக்கல்?

வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் நியமனம் தொடர்பில் சிக்கல்?


வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் தெரிவில் பிரச்சினை எழுந்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராக ந.அனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுழற்சி முறையில் தலைவர் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜாவுக்கு தொலைநகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 28.07.2011 திகதியிட்டு வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் - 2011 எனத் தலைப்பிட்டு, வல்வெட்டித்துறை நலன்விரும்பிகள் என சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 11 பேர் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறையில் இருந்து தொலைநகல் மூலம் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு :

1. முன்னுரிமை வாக்கின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு மட்டுமே அன்றி தலைவர் உபதலைவர் தெரிவுக்கு அல்ல என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.

2. நியமனப்பத்திரம் தயாரித்த வேளை 26.01.2011 ல் திரு சுமந்திரன் பா.உ முன்னிலையில் தங்கள் திரு.அனந்தராஜாவின் கேள்விக்கு பதிலளிக்கையில் முன்னுரிமை வாக்குகளை மட்டும் கருத்தில் கொள்ளாது வேறு பல அம்சங்களும் சேர்த்தே பரிசீலிக்கப்படும் எனப் பதிலளித்தமையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

3. இந் நிலையில் திரு.ந. அனந்தராஜ் உள்ளிட்ட எமது உறுப்பினர்கள் மத்தியில் சுழற்சி முறையில் தலைவர், உப தலைவர் பதவிகள் பகிர்ந்து வகிக்கும் திட்டத்தினை அமுல்படுத்த ஒரு மனதாக தீர்மானித்துள்ளோம்.

4.இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களும் போட்டியிட்ட வேட்பாளர்களும் மற்றும் வல்வெட்டித்துறை நலன் விரும்பிகளும் ஒருமித்த கருத்துடன் சிவாஜிலிங்கம் முதல் ஒரு ஆண்டும் அனந்தராஜ் அடுத்த இரு ஆண்டுகளும் குலநாயகம் ஒரு ஆண்டும் தலைவர் பதவியை வகிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

5. உப தலைவார் பதவி சதீஸ் இராமச்சந்திரன் (தெரிவாகதவர்) ஜெயராஜ், மயூரன், ஜெயதீஸ் ஆகியோருக்கிடையில் 4 ஆண்டுகளும் பகிர்ந்து அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

6. 4ம்,5ம் பந்திகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்த ஏதுவாகவும் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கு கால அவகாசத்தை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் தற்காலிக ஏற்பாடாக தலைவராக க.ஜெயராஜா வையும் உப தலைவராக க.சதீஸ் ஐம் நியமித்து தேர்தல் ஆனையாளருக்கு அறிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

7. 6ம் பந்தியில் குறிப்பிட்டுள்ள குறைந்த பட்ச கோரிக்கைகளையும் ஏற்கபடாது விடத்தில் எமது கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் நகரசபை நிர்வாகத்துடன் ஒத்துழைக்காது செயற்படுவதன் மூலம் நகரசபை செயற்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம். என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக