சனி, 23 ஜூலை, 2011

Slut Walk பெண் எப்போதும் பாதிக்கப்பட்டவளாகவே இருப்பதா


கனடா நாட்டிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில், தனிநபர் பாதுகாப்பு குறித்து பேசியபோது டோரண்டோ நகரத்தின் காவல்துறை அதிகாரி மிச்சேல் சாங்குயினிட் சொன்ன கருத்து, உலகம் முழுவதும் பெண்களைப் போர்க்கொடி தூக்க வைத்திருக்கிறது. அவர் வெளியிட்ட கருத்து இதுதான்: "இதையெல்லாம் நான் பேசக்கூடாதுதான். இருந்தாலும் சொல்கிறேன். பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நடத்தைகெட்ட பெண்போல உடை அணியக்கூடாது'.   இது இந்தியாவில் எல்லா வீடுகளிலும் அப்பா அம்மா சொல்வதுதான். இதற்கெல்லாம் கோபப்பட்டு தெருவில் இறங்கிப் போராடுவார்களா என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக உலகத்தின் பல நாடுகளில் ஊர்ஊராக "ஸ்லட் வாக்' என்ற பெயரில் பெண்கள் தத்தம் விருப்பம்போல உடைகளை அணிந்தும், அணியாமலும் நடந்து உலகத்தின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றனர். அந்தக் காவல்துறை அதிகாரி வெளியிட்ட கருத்து ஒரு ஆணாதிக்கவாதியின் கருத்து என்பது அவர்களது வாதம்.   ""நாங்கள் எங்கள் விருப்பம்போல உடையணிந்து கொள்ளும் தனிநபர் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. அவரவர் உணர்வுகளை ஆண்கள் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் நாகரிகமே தவிர, நாங்கள் அதற்காக இப்படித்தான் உடையணிய வேண்டும் என்றோ அவர்களது உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் உடை அணிகிறோம் என்றோ விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது'' என்பதுதான் அவர்கள் முன்வைக்கும் வாதம்.   மேலைநாடுகளில் நடப்பது இருக்கட்டும். இந்தியாவிலும் இந்த "ஸ்லட் வாக்', ஜூலை 17-ம் தேதி போபால் நகரில் நடந்தது. இந்தப் போராட்டத்துக்கு வரவேற்பும் பாராட்டும் தெரிவித்து "ஃபேஸ்புக்'கில் பதிவு செய்தவர்கள் 5,000 பேர் என்றால், ஊர்வலத்துக்கு வந்தவர்கள் 50 பேருக்கும் குறைவு. இதில் பாதிப் பேர் இளைஞர்கள். ஒரு சிறிய வித்தியாசம். மேலைநாடுகளில் நடந்ததுபோல அல்லாமல், போபாலில் பெண்கள் ஜீன்ஸýம், டி-ஷர்ட்டும் அணிந்திருந்தனர்.   அடுத்து தில்லியில் ஜூலை 31-ம் தேதியும், மும்பையில் செப்டம்பர் மாதத்திலும் இந்த "ஸ்லட் வாக்' நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலும் இப்படியொரு பேரணி நடந்தாலும் நடக்கலாம். (இந்தியாவில் ஊர்வலத்துக்கு வெட்கமில்லாப் பேரணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்).  

 இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் மாநிலம் மத்தியப் பிரதேசம் என்பதால் இந்த ஊர்வலத்தை இந்தியாவில் முதலில் போபாலில் தொடங்கப்பட்டது என்று கூறும் அமைப்பாளர் உமாங் சபர்வால், "இந்த ஊர்வலத்தில் இந்தியப் பண்பாட்டுக்கு எதிராக, உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் ஆடைக் குறைப்பு செய்யாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்' என்று கூறியிருக்கிறார். 

 இந்தியாவில் ஆடைக் குறைப்பு பண்பாட்டுக்கு எதிரானது என்றால் மேலைநாடுகளில் சொந்தப் பாதுகாப்புக்கே எதிரானது இப்படிப்பட்ட ஆடைக்குறைப்பு. மிக அதிகமான அளவு பாலியல் பலாத்காரம் சர்வசாதாரணமாக மேலைநாடுகளில் நடந்தேறி வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரம் என்கின்ற பெயரில் இளைஞர்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் இயங்கி வருவதால் ஆண் பெண் இருபாலாரும் சர்வசாதாரணமாக மது அருந்தும் நாகரிகமும் நிலவில் உள்ளதால் அங்கே பாலியல் பலாத்காரங்களுக்கான வாய்ப்பு மிக மிக குறைவு . இந்தியாவின் நிலை முற்றிலும் வேறானது.   பெண்களுக்குத்தான் விபச்சாரி, விதவை என்ற சொல் இருக்கிறது, ஆண்களுக்கு இல்லை என்கிற வாதமும், "பெண்கள் ஒழுங்காக உடுத்தவில்லை என்றால் பிரச்னைகளைத் தேடிக்கொள்வார்கள்' என்று சொல்வது, ஒரு சமூகத்தில் நடைபெறும் ஒழுங்கீனத்தை நியாயப்படுத்த பெண் மீது போடப்படும் பழி என்றும் பெண்ணியவாதிகள் சொல்லும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.   ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், சொந்த வாழ்வில் ஒழுக்கமில்லாத பெண் என்பது தெரியவந்ததால், அந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்துவிட்டது. பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கும், அவர் ஒழுக்கமற்ற பெண் என்பதையும் முடிச்சுப்போடும் தீர்ப்பை ஆணாதிக்கத் தீர்ப்பு என்று அவர்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. 

  கடந்த வாரம், தில்லி போலீஸ் துறையின் புலனாய்வுப் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்ட பெண்ணின் பணியாணை ரத்து செய்யப்பட்டது. ஏனென்றால், அவரது பழைய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் "ஃபேஸ்புக்' மூலம் பரவி பிரச்னையானது என்பதுதான். அவர் மீது கோபம் கொண்டு அந்தரங்கக் காட்சிகளை இணையதளத்தில் கசியவிட்டார் தன் முன்னாள் காதலன் என்ற வாதம் ஏற்கப்படவில்லை. வேலை பறிபோனதுதான் மிச்சம். ஆணாதிக்க உலகில் பெண் எப்போதும் பாதிக்கப்பட்டவளாகவே இருப்பதா என்கிற கோபத்தில் நியாயமிருக்கிறது.   "ஸ்லட் வாக்' போன்ற போராட்டங்கள் இந்திய மண்ணுக்கே உரித்தான பிரச்னைகளிலிருந்து கிளம்பினால், அந்தப் போராட்டங்களில் மண்வாசம் இருக்குமென்பது மட்டுமல்ல, அதற்கு நிச்சயம் ஆதரவும் கிடைக்கும். "ஸ்லட் வாக்' பற்றி அறிந்திருக்கும் இன்றையத் தமிழக இளம்பெண்களில் எத்தனை பேருக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மாராப்பு அணிய உரிமையுண்டு என்று போராடிய ""தோள்சீலைப் போராட்ட'' வரலாறு தெரியும்?   ஆணாதிக்கம் வடிவமைக்கும் அரைகுறை ஆடைகளை இன்றைய திரைப்படங்களில் கதாநாயகிகளை அணியச்செய்து பிறகு அவை சந்தையில் பிரபலமாக்கப்படுகின்றன. ஆண்களின் திணிப்பு எது என்பதைத் தெரிந்து, தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பெண்களின் உரிமை மறுபேச்சுக்கு இடமின்றி பாராட்டுக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக