செவ்வாய், 12 ஜூலை, 2011

கால்களை இழந்த நபருக்கு மாற்றுக்கால்கள் பொருத்தி ஸ்பானிய வைத்தியர்கள் சாதனை _

கால்களை முற்றுமுழுதாக இழந்த நபரொருவருக்கு வேறு ஒருவரின் கால்கள் இரண்டினைப் பொருத்தி ஸ்பானிய வைத்தியர்கள் மருத்துவ உலகில் முதன் முறையாக சாதனை புரிந்துள்ளனர். ஸ்பெயினின் வெலன்சியாவில் அமைந்துள்ள ‘லா பே’ வைத்தியசாலையில் நடைபெற்ற இச்சத்திரசிகிச்சையை நடத்தியவர் பெட்ரோ கவாடாஸ் என்ற வைத்தியர் ஆவார்.
ஸ்பெயினில் முதன் முறையாக முகமாற்று அறுவைச் சிகிச்சையொன்றை மேற்கொண்டவர் என்பதுடன் அவ்வறுவைச் சிகிச்சையில் உலகின் முதன்முறையாக புதிய நாக்கு மற்றும் தாடையைப் பொருத்தியவர் என்ற பெருமை இவருக்கே உண்டு.எனினும் பொருத்தப்பட்ட கால்கள் இயங்குகின்றனவா என்பதினை அடுத்த மாதம் அளவிலேயே கண்டுகொள்ள முடியும் என இச்சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.இச்சிகிச்சையை மேற்கொண்ட நோயாளி யாரென இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இவர் விபத்தொன்றின்போது முழுமையாக இரண்டு கால்களையும் இழந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு ஏற்கனவே இரண்டு போலி கால்களை வைத்தியர்கள் பொருத்த முற்பட்ட போது அது வெற்றியளிக்கவில்லை.
மிகவும் அவதானத்துடன் எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகளை இணைக்கும் இச்சத்திரசிகிச்சையானது சுமார் 14 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது.
கடந்த வருடமே இச்சத்திரசிகிச்சை நடைபெற இருந்தபோதிலும் அந்நபருக்கு பொருத்தமான வழங்குநர் கிடைக்காத காரணத்தில் அது பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
salasalappu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக