செவ்வாய், 12 ஜூலை, 2011

பத்மநாபர் புதையல் தமிழக கோயிலுக்கு சொந்தமானது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது

நாகர்கோவில் : திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் கிடைத்திருக்கும் பல கோடி மதிப்பிலான நகைகள் தமிழகத்தின் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருவட்டாரில் பாதாள அறை அமைக்க முடியாததாலேயே திருவாங்கூர் மன்னர்கள் இந்த நகைகளை திருவனந்தபுரத்துக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் அதிகளவில் தங்க நகைகள், வைர, வைடூரியங்கள் பதிக்கப்பட்ட நவரத்தின மாலைகள், பிரமாண்ட அரியாசனங்கள், தங்க, வெள்ளி பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இவற்றின் புராதன தன்மையை கணக்கில் கொண்டால் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை தாண்டும் என்று தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கோயிலின் 5 பாதாள அறைகளை திறந்து சோதனை நடந்து முடிந்த நிலையில், கோயிலை பராமரித்து வரும் திருவாங்கூர் மன்னர் குடும்பம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அந்த ஒரு அறையை திறக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் கோயிலின் பாதுகாப்பு குறித்தும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து திருவாங்கூர் மன்னர் குடும்பத்துடன் கேரள அரசு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபர் கோயில் ரகசிய அறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகள், தமிழக கோயிலுக்கு சொந்தமானது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. நகைகள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு உரியது என்று கூறப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் திருவாங்கூர் மன்னர்களின் குலதெய்வமாக கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள்தான் இருந்தது. அதன் பிறகு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியை குல தெய்வமாக வணங்கத் தொடங்கினர். அந்த காலகட்டத்தில்தான் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள நகைகளை பத்மநாப சுவாமி கோயிலுக்கு மன்னர் குடும்பத்தினர் மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. திருவட்டாரை ஒட்டி தாமிரபரணி, கோதையாறு, பரலி ஆகிய 3 நதிகள் ஓடுகிறது. இதனால் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பாதாள அறைகள் கட்ட முடியாத நிலை இருந்தது. ஆனால் பத்மநாப சுவாமி கோயிலில் பாதாள அறைகள் அமைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. இதனால்கூட நகைகளை இடம் மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நகைகள் டச்சு மற்றும் ஆற்காடு நவாப் படையெடுப்பின்போது மாற்றப்பட்டிருக்கலாம் என சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், பத்மநாபருக்கு அண்ணனாக கருதப்படுகிறார். நேபாளத்தில் இருந்து சாளாக்கிராம கல்லைக் கொண்டு உருவாக்கப்பட்ட பத்மநாபர் சிலை 18 அடி நீளம் கொண்டது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாளும் அதேபோல அனந்த சயன கோலத்தில் (படுத்த நிலை) இருக்கும் சுவாமிதான். ஆனால் இந்த சிலை 22 அடி நீளம் கொண்டது. 108 வைண திவ்ய தேச கோயில்களில் திருவட்டார் கோயில்தான் பெரிய சிலை அமைப்பை பெற்றுள்ளது. இதைவிட திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நகைகளை திருவாங்கூர் மன்னர்கள் அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக