செவ்வாய், 26 ஜூலை, 2011

பாமக நிர்வாகி படுகொலை: ராமதாஸ் கண்டனம்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவருமான இளஞ்செழியன் மதுரையில் இன்று படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இளஞ்செழியன் இளம் வயதிலிருந்தே பாமகவில் தம்மை இணைத்துக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட்டவர். ஆற்றல் மிக்க செயல்வீரர். அவரது மறைவு எனக்கும், மதுரை மாவட்ட பாமகவுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இளஞ்செழியன் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விலைமதிப்பற்ற மனித உயிரை படுகொலை செய்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக