செவ்வாய், 26 ஜூலை, 2011

நக்கீரன்' காமராஜ்=ஜாபர் சேட், 8 அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்

சென்னை: திமுக ஆட்சியில் நடந்த வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அந்த ஆட்சியில் தமிழக உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் உள்ளிட்ட 9 அதிகாரிகளின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்த இவர் ஜெயலலிதா முதல்வரானதும் மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக்கப்பட்டார்.

இந் நிலையில் இவரது சென்னை அண்ணாநகர் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

சோதனையின் போது வீட்டிலிருந்த யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனையையொட்டி அவரது வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் திருவான்மியூரில் வீட்டு வசதி வாரியத்திடம் ஜாபர் சேட் வீட்டு மனைகள் பெற்றது குறித்து இந்த சோதனை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதே போல கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பி.பாண்டியன், கணேசன், வினோதகன், கருணாநிதியின் தனி உதவியாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம் மற்றும் இன்னொரு உதவியாளர் அறிவழகன் ஆகியோர் வீடுகளிலும் சோதனைகள் நடந்து வருகின்றன.

ஜாபர் சேட்டின் மாமனார் வீட்டில் சோதனை:

அதே போல பெரியகுளத்தில் வசித்து வரும் ஜாபர் சேட்டின் மாமனார் சலீம் வீட்டிலும் ரெய்ட் நடந்தது. சலீ்ம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது வீட்டிலும் இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் ஜாபர் சேட்டின் நண்பர் ராஜு, நக்கீரன் ஆசிரியர் காமராஜ், நிஜாமுதீன் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐ.பி.எஸ். அதிகாரியான ஜாபர் சேட் கடந்த திமுக ஆட்சியில் போலீஸ் துறையில் முக்கிய பங்கு வகித்தார். திருச்சி மண்டல ஐ.ஜியாக இருந்த அவர் சென்னையில் உளவுப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். பின்னர் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக்கப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருப்பதால் இவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் புகார் அனுப்பின. இதையடுத்து அவரை மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் பார்வையாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.

ஆனால், ஜாபர் சேட் அங்கு பணியாற்ற மறுத்து விடுமுறையில் சென்றார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து அதிமுக அரசு அவரை உளவுத்துறையில் இருந்து அதிரடியாக மாற்றி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக இடமாற்றம் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக