வியாழன், 14 ஜூலை, 2011

வேள்வியில் பலியான கடாக்களின் ஆத்மாக்கள் எழுதிய கடிதம்




 யாழ்ப்பாணம்
அன்புமிகு ஆசிரியருக்கு வணக்கம்! உயிரோடு இருக்கும்போது எழுதமுடியாமல் போன இக்கடிதத்தை தேகாந்த நிலையில் எழுதுகின்றோம்.

தேகாந்த நிலையில் கடிதம் எழுதுவது யார் என்று நீங்கள் சிந்திப்பீர்கள். கவுணாவத்தை வேள்வியில் வெட்டிச் சரிக்கப்பட்ட கடாக்கள்தான் நாங்கள்.

பலியாகிப்போன கடாக்களின் கடிதம்தானே என்று இதனை இருட்டடிப்புச் செய்து விடாதீர்கள். என்ன செய்வது நாங்கள் வாய்பேச முடியாத ஜீவராசிகள். கவுணாவத்தையில் எங்களுக்கு நடந்த கதிபோல் உங்களுக்கு நடந்திருந்தால் பக்கம் பக்கமாக எழுதி குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டிருப்பீர்கள். நாங்கள் ஆடுகள் என்பதால் எங்கள் கழுத்தை வெட்டுவதில் உங்களுக்கு ஆனந்தம். என்னே கொடுமையிது.

எங்களை வளர்த்தவர்கள் நீங்கள்தான். நாங்கள் குட்டிகளாக இருந்தபோது எங்கள் எசமான், எசமானனின் பிள்ளைகள் எங்களை தூக்கி முத்தமிட்டு வளர்த்ததைப் பார்த்தபோது நாங்கள் அடைந்த மகிழ்விற்கு அளவேயில்லை.

கிடங்கு வெட்டி எங்களை அதனுள் இறக்கி உணவு ஊட்டி, முதுகைத்தடவி நீங்கள் எங்கள் மீது காட்டிய அன்பை நினைத்தபோதெல்லாம் வாய்பேச முடியாத நாங்கள் எங்கள் உடலை அசைத்து உங்களுக்கு நன்றி செலுத்தினோம்.

ஒருநாள் அதிகாலை வேளை எங்களை மஞ்சள் நீரால் நீராட்டி பூமாலை சூட்டி, தங்கச் சங்கிலி அணிவித்து பட்டுடுத்தி அலங்கரிக்கப்பட்ட லான்ட் மாஸ்ரரில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது ஓ! இறைவா உனக்கு பல்கோடி நன்றிகள். எங்கள் எசமான், தான் பெற்ற ஆண்பிள்ளையை எவ்வாறு மாப்பிள்ளைக் கோலத்தில் கண்டு மகிழ்வாரோ! அதேபோல் எங்களையும் அலங்கரித்து மகிழ்கிறாரே! என்று அகமகிழ்ந்தோம்.

கவுணாவத்தை வைரவர் கோயில். அங்கு ஆயிரக்கணக்கான கடாக்கள். என்னே மகிழ்வு.

இன்று சர்வதேச கடாக்கள் தினமோ! என்று நாம் நினைத்தது உண்டு.

சிறிது நேரம் செல்லச் செல்ல வாள் ஏந்தியவர்கள் எம் இனத்தை ஒவ்வொன்றாக வெட்டிச் சரித்தார்கள். ஐயா, என்னை வளர்த்த என் தந்தையே! என்னை வெட்டாதீர்கள் என்று கத்தும் சத்தம் கேட்கிறது. கூடவே வெட்டுண்ட கடாக்கள் நிலத்தில் கிடந்து துடிக்கின்றன.

எப்படி அந்தப் பரிதாபத்தை விபரிப்போம். உங்களால் முடிந்தால் youtube தொலைக்காட்சியின் கொலைக்களம் ஆவணப்படத்தை பாருங்கள்.

ஓ! நாங்கள் ஒருபோதும் நினைக்காத அந்தப் பெருங்கொடூரத்தை எங்களைத் தூக்கி வளர்த்த எங்கள் எசமானர்களே செய்துவிட்டார்கள். தந்தை மகனை வெட்டிக்கொன்றால் நிலைமை எப்படியிருக்குமோ அதுபோலத்தான் எங்களுக்கும் நடந்தாயிற்று.

அன்பார்ந்தவர்களே! நாங்கள் இப்போது மறுஉலகத்தில் இருக்கின்றோம். எங்களுக்கு மானிடப்பிறவி கிடைக்க அருள்பாலிப்பதாக, இறைவன் கூறினார். அந்தப் பயங்கரமான பிறப்பு வேண்டாம் எனக்கூறி பிறவாவரம் வேண்டியுள்ளோம். எங்கள் வேண்டுதல் இறைவனின் பரிசீலனையில் உள்ளது.

அதேநேரம் எங்களை வெட்டிச் சரித்தவர்களின் பாவப்பட்டியல் மிகப்பெரியது, அவர்களுக்கு எப்பிறப்புக்கிடைக்குமோ என்பது எமக்குத் தெரியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக