தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக அரசாங்கம் எவரையும் ஏற்காது
* வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பைவிட அரசுக்கே மக்கள் ஆதரவு உண்டு.
* வடக்கில் சகல உள்ளூராட்சி சபைகளிலும் அரசு போட்டியிடும்.
* வடக்கில் சகல உள்ளூராட்சி சபைகளிலும் அரசு போட்டியிடும்.
அரசாங்கமோ ஜனாதிபதியோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகலரும் மக்கள் பிரதிநிதிகள் என்பதாலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், 2009 மே மாதத்திற்கு முன்பிருந்த நிலை நாட்டில் இன்றில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளைத் தீர்மானிக்கும் செய்தியாளர் மாநாடு பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் தலைமையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது பயங்கரவாதம் இல்லை. சகலரும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கக்கூடிய நிலை உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் அதன் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்கும். அதே போன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் சுதந்திரமாக தெரிவிக்க முடியும்.
தற்போது தமிழ் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமது தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தொடர்பில் சர்வதேச அழுத்தங்களின் விதத்தில் மாற்றம் காணப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சர்வதேச அழுத்தங்களும் உள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றிருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்களின் பின்னணியில் அப்போது புலிகள் செயற்பட்டனர். புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறப்பட்ட யுகம் ஒன்று இருந்தது.
அரசாங்கம் இவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை நோக்குகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போன்றே அரசாங்கத்திற்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஆதரவு உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவைப் பொறுத்த வரை கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 41 வீதமான வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 49 வீத ஆதரவையும் பெற்றிருந்தது.
இம்மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளிலும் கிளிநொச்சியில் 3 உள்ளூராட்சி சபைகளிலும் அரசாங்கம் போட்டியிட உள்ளது. இம் முடிவுகளும் அரசாங்கத்திற்கான ஆதரவை தெளிவுபடுத்துவது உறுதி. அரசாங்கம் ஒரு போதும் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறு ஏற்றுக் கொண்டதனால்தான் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தார். இப்போதும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என்பதை அரசு ஒரு போதும் ஏற்காது.
தற்போது வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் அரசாங்கத்திற்கு சிறந்த ஆதரவு நிலவுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்ற நிலை இன்றி 30 வருடங்களுக்கு பின்னர் இம்முறை தான் சுதந்திரமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தே வடக்கு மக்கள் வாக்களித்தனர். அப்போது ஜனநாயகம் பற்றி எவரும் பேசியதில்லை. இன்று ஜனநாயகம், சுதந்திரம் என்று பலரும் குரல் கொடுக்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை நாம் தமிழ் மக்களுக்காகவே விரைவு படுத்துகிறோம். இதன் நன்மைகளை தமிழ் மக்களே அடைவர். எந்த அமைப்புகளுக்காகவும் நாம் தீர்வை முன்வைக்கவில்லை.தற்போது வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
புலிகள் தமது பிள்ளைகளை கடத்திச் சென்றநிலை இன்று அம்மக்களுக்கு இல்லை. பொதுவாகவே வடக்கில் தற்போது கடத்தல், காணாமல் போதல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மக்களின் தேவை தமக்கான வீடு, விவசாயம் செய்வதற்கான சூழல், தமது பிள்ளைகளுக்கான கல்வி, தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவையே. அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிட்டு வருகின்றது. ஒரு தனி நபர் என்ற நோக்கில் அதை நோக்கினால் தெற்கில் 25 பேருக்கு செலவிடக்கூடிய நிதி வடக்கில் ஒருவருக்காக செலவிடப்படுகின்றது. மனிதாபிமான நடவடிக்கையின் போது 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீள்குடியேற்றப்பட்டு தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே மீள்குடியேறுவதற்காக எஞ்சியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நிறைவு பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முடிவுற்றதும் எஞ்சியுள்ள 12 ஆயிரம் பேரும் மீள்குடியேற்றப்படுவார்கள். பாராளுமன்றம் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் சபையாகும். அதனால்தான் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது.
வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதைப் போல அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக் கொடுக்கும். இது விடயத்தில் அரசாங்கம் அதன் தெளிவான தீர்மானத்தை தெரிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வகட்சிகளின் கருத்துக்களும் இத்தீர்வில் இணைத்துக்கொள்ளப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், சர்வகட்சி குழுவின் செயற்பாடுகள் 2009 மே மாதத்தில் முன்னர் இடம் பெற்றவை. எவ்வாறெனினும் சர்வகட்சிக் குழுவின் கருத்துக்களையும் இனப்பிரச்சினைத் தீர்வில் இணைத் துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக