வெள்ளி, 1 ஜூலை, 2011

றெமீடியஸ்:பத்திரிகை தர்மத்தை துளியும் மதிக்காமல் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் எனக்கு உரிய கௌரவம் அளிப்பதில்லை - மாநகர எதிர்க்கட்சி உறுப்பினர் றெமீடியஸ் குற்றச்சாட்டு
யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் எனக்கு உரிய கௌரவம் அளிக்காமலும் அவர்களால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து என்னுடன் கலந்துரையாடப்படாமலும் நடந்து வருகிறார்கள் என மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற ஆறாவது மாதாந்தக் கூட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடலில் முதல்வரின் அனுமதியுடன் சபையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகரசபைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் என்னை அனைவரது முன்னிலையில் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக நியமித்தனர். இருந்தும் யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் தழிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் எனக்கு உரிய கௌரவம் அளிக்காமலும் அவர்களால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து என்னுடன் கலந்துரையாடப்படாமலும் நடந்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும் பத்திரிகைக்கு என்று பொதுவாக ஒரு தர்மம் உண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகும் சில பத்திரிகைகள் பத்திரிகை தர்மத்தை துளியும் மதிக்காமல் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு என் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது வருந்தத்தக்கது.

அத்துடன் என்னிடம் எதுவித விசாரணையும் நடத்தாமல் நான் கட்சி மாறிவிட்டதாக செய்திகள் வெளியிட்டதன் மூலம் பத்திரிகை தர்மமே குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது ஒருவரைப்பற்றி ஒரு செய்தி வெளியிடுவதனால் முதலில் சம்மந்தப்பட்டவருடன் தொடர்பு கொண்டு செய்தியின் உண்மைத்தன்மை ஊர்ஜிதம் செய்த பின்னரே வெளியிடுவதுதான் முறை ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பத்திரிகை இவ்விதமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதில் முனைந்து நிற்கின்றது.

தொடர்ந்து பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு பல வழிகளில் இரவு பகல் பாராது சிரத்தையுடன் முன்னின்று உழைத்த மாநகர முதல்வருக்கும் மாநகர சபை ஊழியர்களுக்கும் மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  

இம் மாதாந்த கூட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற கடந்த மாதத்திற்கான சுகாதாரக்குழு  மராமரத்துக்குழு நிதிக்குழு அறிக்கைகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக