திங்கள், 4 ஜூலை, 2011

வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!

சதீஷ் குமார், சடலமாக...
சதீஷ் குமார், சடலமாக...
மனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.
சட்டப்படிப்பு படித்துள்ள 24 வயதேயான சதீஷ்குமார், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இரவில் வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில், மறுநாள் காலை திருமங்கலம் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்தார், சங்கரசுப்பு. அதன் பிறகு அண்ணாநகர் டி.சி.யைச் சந்தித்தும், கமிஷனர் திரிபாதியைச் சந்தித்தும் முறையிட்டுள்ளார். இதற்கிடையே 9ஆம் தேதியன்று சதீஷ்குமாரின் செல்போனை எடுத்துப் பேசிய ஒரு போலீசுக்காரர், ஐ.சி.எப். வடக்கு காலனி ஏரிக்கரையில் மோட்டார் சைக்கிள் அருகே இந்த செல்போன் கிடந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஜூன் 10ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத் தில் ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்துள்ளார். திருமுல்லைவாயில் போலீசு நிலையத்தின் போலீசு ஆய்வாளர்களான கண்ணன், ரியாசுதீன் ஆகியோர் தனது மகனைக் கொலை செய்திருப்பார்கள் என்று சந்தேகம் உள்ளதாகவும், ரியாசுதீனின் வீடு ஐ.சி.எப். ஏரிக்கரை பகுதியில்தான் உள்ளது என்பதால், அப்பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்த வேண்டும் என்றும் சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பிறகு நீதிமன்றம் சிறப்புக்குழு அமைத்துத் தேடுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. அந்த ஏரியில் 13ஆம் தேதிவரை தேடிப் பார்த்து ஏதும் கிடைக்கவில்லை என்று இக்குழு தெரிவித்தது. 13ஆம் தேதியன்று “மக்கள் டிவி’’யின் செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது, அந்த ஏரியில் வெங்காயப் பூண்டு செடிகளுக்கு மத்தியில் ஒரு சடலம் மிதப்பதைப் பார்த்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்க, அதன் பின்னரே அழுகிய நிலையில் சதீஷ் குமாரின் சடலம் மீட்கப்பட்டது. சங்கரசுப்பு தனது ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்திருந்ததைப் போலவே, ஐ.சி.எப். ஏரிக்கரையில் சதீஷ்குமாரின் சடலம் கிடைத்திருப்பதிலிருந்து கூலிப்படையை ஏவி இக்கொலையை போலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் செய்திருப்பார்கள் என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.
போலீசு ஆய்வாளர்களான கண்ணனும் ரியாசுதீனும் விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைத்துப் பணம் பறிப்பதில் பேர்போனவர்கள். கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வான சுதர்சனத்தைக் கொலை செய்த வட நாட்டைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற கொள்ளைக்காரனைப் பிடிக்க உ.பி. மாநிலத்துக்குப் போன இவ்விரு போலீசுக்காரர்களும் அவனைப் பிடிக்க முடியாமல், அவனுடைய அண்ணன் மகன்கள் இருவரைப் பிடித்துச் சித்திரவதை செய்து, பின்னர் போலி மோதலில் சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளாவர்.
திருமுல்லைவாயிலைச் சேர்ந்த அருண்குமார் என்பவரைத் திருட்டுக் குற்றம் சாட்டிச் சட்டவிரோதமாக அடைத்து வைத்து இவர்கள் சித்திரவதை செய்து பணம் பறித்து வந்தனர். இந்நிலையில் அருண்குமாரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துமாறு ஆட்கொணர்வு மனுவை சங்கரசுப்பு தாக்கல் செய்ததோடு, இவ்விரு காக்கிச்சட்டை கயவாளிகளின் அயோக்கியத்தனத்தைத் திரைகிழித்தார். இவ்விருவருக்கும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, இவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த இவ்விரு போலீசுக்காரர்களும் “உனக்குக் குடும்பம் இருப்பதை மறந்துவிடாதே” என்று சங்கரசுப்புவை மிரட்டியதோடு, வழக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளனர். எனவே, இவர்கள்தான் இக்கொலையைச் செய்துள்ளனர் என்று சங்கரசுப்பு மட்டுமின்றி, உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.
சதீஷ்குமார் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பிறகுதான், சில நாட்கள் கழித்து அவரது உடல் ஏரியில் வீசப்பட்டுள்ளது என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதியன்று கீழ்ப்பாக்கம் மருத்துவனையில் பிரேதப் பரிசோதனை நடந்த போது 500க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு போலீசுத் துறை ரவுடிகளைக் கைது செய் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, கொலைகாரப் போலீசுக்கு எதிராக முழக்கமிட்டபடியே சதீஷ்குமாரின் இறுதி ஊர்வலத்தை நடத்தினர். இப்படுகொலைக்கு எதிராக வழக்குரைஞர்கள் உடனடியாக ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்த பிறகே, இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடனேயே சட்டம்ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதற்பணி என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயா ஆட்சி என்றால் வரம்பற்ற அதிகாரத்துடன் போலீசு கொட்டமடிக்கும் என்பதை முந்தைய அவரது ஆட்சிகள் மட்டுமின்றி, தற்போது சதீஷ்குமாரின் படுகொலையும் அண்மைக்காலமாக பெருகிவரும் கொட்டடிக் கொலைகளும் நிரூபித்துக் காட்டுகின்றன. பாசிச ஜெயா ஆட்சியில் வழக்குரைஞர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானிய மக்களின் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. கொலைகார போலீசுக்காரர்களையும், இப்பயங்கரவாதச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ள போலீசு அதிகாரிகளையும் கைது செய்து, பகிரங்க விசாரணை நடத்தித் தூக்கிலிடவும், போலீசு பயங்கரவாதத்தை வீழ்த்தவும் உழைக்கும் மக்கள் போராடுவதே இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக