திங்கள், 4 ஜூலை, 2011

கையைத் திறந்து பார்த்தால், ஒரு சிறிய அம்மன் சிலை.அற்புத சக்தி படைத்த கில்லாடி சாமியார்

போலி சாமியார்கள் வரிசையில், இன்னொரும் சாமியாரும் உள்ளார். இவர், சிக்கலில் மாட்டிக் கொண்டது பெண்ணால்! பெண்களை வசியப்படுத்தி, மெஸ்மரிச மயக்கத்துக்கு உட்படுத்தி, தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள, அவர்களை பயன்படுத்திக் கொள்வது அவரது வழக்கம் என்று அரசல், புரசலாக முன்பு கேள்விப்
பட்டிருக்கிறேன். கோவையைச் சேர்ந்த என் நீண்ட கால வாசகி ஒருவர், சமீபத்தில் கூறிய விஷயம், சாமியார் பற்றிய அரசல், புரசல் சமாச்சாரத்தை உறுதிப் படுத்தியது.
அந்த வாசகி, கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தவர். மாநில அளவில் ஹாக்கி போட்டிகளில் கலந்து, பல பரிசுகளை வென்றவர்; ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்டவர்; நன்கு பாடக் கூடியவர்; ஓவியமும் வரைவார். இப்படி பல திறமைகள் இருந்ததால், போலீஸ் துறையில் உயர் அதிகாரியாகச் சேர வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.
ஆனால், இந்தக் காலத்திலும் பல பெற்றோர், பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று நினைக்கின்றனரே... என்ன செய்வது? நம் வாசகியின் பெற்றோரும் அந்த ரகம் என்பதால், தம் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து, அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டனர்; மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலையில் இருக்கிறார்.
"மாப்பிள்ளை அமெரிக்காவில் இருந்தால் போதும்... வேறு ஏதும் வேண்டாம்...' என்று நினைக்கும் பல பெற்றோரை எனக்குத் தெரியும். மாப்பிள்ளையின் குணநலன்களைப் பற்றியோ, தம் பெண்ணின் எதிர்காலம் பற்றியோ அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.
சரி... விஷயத்துக்கு வருகிறேன்... நம் வாசகிக்கு திருமணம் நடந்து, இரண்டு வருடங்கள் ஆகின்றன. இந்த இரண்டு வருடங்களும், அவருக்கு நரக அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் கணவர். எப்போது பார்த்தாலும் அடி, உதை. மனைவியின் நடத்தையில் சந்தேகம். "யாரைக் காதலிக்கிறாய்?' என்று கேட்டு, மன ரீதியாகவும் சித்ரவதை. வாசகியோ வீட்டில் செல்லமாக வளர்ந்தவர்; ஒரு கடினமான சொல்லைக் கூட கேட்டதில்லை. அப்படிப்பட்டவருக்கு இந்த அடி, உதைகளும், சுடுஞ்சொற்களும் எப்படிப்பட்ட வேதனையை அளித்திருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.
இந்தச் சித்ரவதை காரணமாகவோ அல்லது வேறு எந்தக் காரணமாகவோ தெரியவில்லை - வாசகிக்கு ஒரு உடல் உபாதையும் வந்து சேர்ந்தது; அதாவது, வயிற்று வலி. எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது; வந்தால், உயிரையே உலுக்கி எடுத்து விடும் வலி.
பல மருத்துவமனைகளுக்கும் சென்று, சோதனை செய்தனர். சோதனைகளில் எல்லாமே சரியாக இருந்தது; ஆனால், வலி மட்டும் வந்து கொண்டேயிருந்தது. சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர்; நாலைந்து லகரங்கள் செலவானது தான் மிச்சம்; வாசகியின் வயிற்றுவலிக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
அப்போது தான் ஒரு சில குடும்ப நண்பர்கள் அந்தச் சாமியாரின் மகிமை பற்றிக் கூறி, "அவரிடம் சென்றால் தீராத வியாதியும் தீரும்...' என்று சொல்லி இருக்கின்றனர்.
சாமியாரின் பெயரில் காஞ்சியில் குடிகொண்டிருக்கும் அம்மனின் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். வாசகியை அவரிடம் அழைத்துச் சென்றிருக்கின்றனர் வாசகியின் பெற்றோர். ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை பெற்றோரிடம் கொடுத்து, அதை, 1,008 தடவை எழுதும்படி சொல்லி, அவர்களை ஒரு அறையில் அமரச் சொல்லியிருக்கிறார் சாமியார். அந்த ஸ்லோகம்:
"ஆயுள் தேகி; தனம் தேகி; வித்யாம் தேகி மகேஷ்வரி;
அஷ்ட ஐஸ்வர்யம் தேகி தேகினே பரமேஸ்வரி!'
இதை, 1,008 தடவை எழுத எத்தனை மணி நேரமாகும்... கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!
மற்றொரு தனி அறையில் வாசகிக்கு சாமியாரின், "ட்ரீட்மென்ட்!' என்ன ட்ரீட்மென்ட் தெரியுமா? சொல்கிறேன்...
வாசகியின் பெயரை மட்டுமே கேட்டுக் கொண்ட சாமியார், ஏதோ அவருடன் கூடவே இருந்தது போல், அவருடைய வாழ்க்கைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதில், சில முக்கிய விவரங்கள் வாசகிக்கும், அவர் கணவருக்கும் மட்டுமே தெரிந்தவை. உதாரணமாக, திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் ஆகியும், அந்த வாசகிக்கு கன்னியே கழியவில்லை, அவருடைய கணவர் ஆண்மையில்லாதவர் என்ற விஷயங்களையெல்லாம் சாமியார் கூறியதும், மிரண்டு போயிருக்கிறார் வாசகி.
இதற்கிடையில் வாசகியிடம் ஒரு சிறிய காகிதத்தைக் கொடுத்து, "உன் மனதில் தோன்றும் ஒரு வாக்கியத்தை இதில் எழுதி, உன் கைக்குள் வைத்துக் கொள்!' என்று சொல்லியிருக்கிறார் சாமியார்.
வாசகிக்கு உடல் தானே பிரச்னை? எனவே, "உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே...' என்ற திருமூலரின் வாக்கியத்தை எழுதி, கைக்குள் வைத்துக் கொண்டார். இவர் என்ன எழுதியுள்ளார் என்பதை சாமியார் பார்க்க வாய்ப்பே இல்லை.
எழுதி முடித்து சிறிது நேரம் கழித்து, பேச்சின் இடையே அந்த திருமூலர் வாக்கியத்தைக் கூறி, "அதைத் தானே எழுதியிருக்கிறாய்?' என்று கேட்டிருக்கிறார் சாமியார்; வாசகிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று, "உன் கையில் இப்போது அந்தக் காகிதம் இல்லை; பதிலாக, வேறு ஒன்று உள்ளது; அது, நான் உனக்குக் கொடுக்கும் பரிசு. அதை வைத்து வழிபட்டால், உன் பிரச்னை தீரும்!' என்று சொல்லியிருக்கிறார் சாமியார்.
கையைத் திறந்து பார்த்தால், ஒரு சிறிய அம்மன் சிலை. என்ன... பிரேமானந்தா தன் வாயிலிருந்து வரவழைத்த லிங்கம் ஞாபகம் வருகிறதா? இவ்விஷயங்களை அந்த வாசகி கூறிய போது, எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது.
இதற்குப் பிறகு சாமியாரின் பேச்சும், பாவனையும் மாறியிருக்கிறது. "உன்னிடம் சாமுத்ரிகா லட்சணங்கள் அத்தனையும் இருக்கிறது. அதனால், என்னைப் போன்ற ஒரு ரிஷி உன்னைத் தொட்டு கன்னி கழித்தால், உன் வயிற்று வலி தீர்ந்து விடும்!' என்று வெளிப்படையாகவே தன் ஆசையைக் கூறியிருக்கிறார் சாமியார்.
இதைக் கேட்டதும் வாசகிக்கு வேர்த்து விறுவிறுத்துப் போயிருக்கிறது. "நான் அந்த மாதிரிப் பெண்ணில்லை; என்னை விட்டு விடுங்கள்...' என்று கெஞ்சியிருக்கிறார் வாசகி. அதற்குள் அவருக்கு தலையும் லேசாக சுற்றி, மயக்கம் வருவது போல் இருந்திருக்கிறது. தான் மெஸ்மரிசம் செய்யப்படுவது போல் உணர்ந்திருக்கிறார் வாசகி.
"நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. உன் கணவர் ஆண்மையில்லாதவர் என்றும், அதனால், நீ வேறு ஒருவரைக் காதலிக்கிறாய், அவரோடு ஓடி விடுவதாகவும் சொன்னதாக உன் பெற்றோரிடம் சொல்லி விடுவேன்...' என்றும் மிரட்டியிருக்கிறார் சாமியார்.
எழுந்து ஓடிவிடலாம் என்று யோசித்திருக்கிறார் வாசகி. அவர் உட்கார்ந்திருந்தது கதவுக்கு அருகில் என்பதால், அது கொஞ்சம் சுலபம் தான். உள்பக்கம் தாளிட்டிருக்கும் கதவைத் திறந்து, ஓடிவிடலாம்; ஆனால், வெளியே சாமியாரின் உதவி ஆட்கள் என்ற பெயரில் தடித்தடியாக நின்று கொண்டிருக்கும் அடியாட்களிடமிருந்து எப்படித் தப்புவது?
இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வாசகிக்கு மயக்கம் அதிகமாகி இருக்கிறது. ஒருவேளை - தன்னை மயங்க வைத்து நிர்வாணமாக்கி, அதைப் படமாக எடுத்து... இந்த யோசனை வந்ததும் அடுத்த கணமே கதவைத் திறந்து, ஓடி வந்து விட்டார் வாசகி.
மடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த காரின் அருகே, வேர்க்க, விறுவிறுக்க ஓடி வந்த வாசகி, தங்கள் டிரைவரிடம்,
"ஓடிப் போய் அம்மா, அப்பாவை அழைச்சிட்டு வா... இனி, ஒரு நிமிடம் இங்கே நின்றாலும் நமக்கு ஆபத்து!' என்று கூறியிருக்கிறார்.
டிரைவர், நல்ல பலசாலி என்பதால், பயமின்றி உள்ளே சென்று, வாசகியின் பெற்றோரை அழைத்து வந்து விட்டார். ஆனால், அதற்குள்ளாகவே, வாசகியின் பெற்றோரிடம் அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி விட்டார் சாமியார்.
வீட்டுக்கு வந்ததும் பெண்ணுக்கு ஒரே திட்டு. பிறகு, சாவகாசமாக தன் அம்மாவிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறார் வாசகி. வீட்டு கவுரவம், தங்கைகளின் திருமணம் என்று எதை, எதையோ கூறி, விவாகரத்துக்கும் சம்மதிக்கவில்லை பெற்றோர். இப்போதும் தன் கணவனிடம் அடி, உதை என்று, அமெரிக்காவில் தான் இருக்கிறார் வாசகி.
இது போன்ற சாமியார்களின் கதைகள் எவ்வளவோ கேள்விப்பட்டாலும், படித்தாலும் நம்மவர்கள் ஆசாமிகளிடம் செல்வதை நிறுத்தி விட்டு, கோவில்களில் இருக்கும் நிஜ சாமிகள் பக்கம் வரவே மாட்டார்களோ என, எண்ணத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக