புதன், 27 ஜூலை, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரிவை வாக்கு விகிதாசாரம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது!

- செங்குட்டுவன்
நடைபெற்று முடிந்துள்ள வடக்கு உள்ளு+ராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து  தமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் மனவருத்தமோ சோர்வோ அடைவதற்கு எந்தக்காரணமும் இல்லை.

முதலாவதாக, ஐ.தே.க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற படுபிற்போக்கான கட்சிகளும், தம்மை இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டு, சந்தர்ப்பவாத ரீதியாக அதே பிற்போக்குவாத சக்திகளுடன் கைகோர்த்து செயற்பட்டு வருபவர்களான ஜே.வி.பி, விக்கிரமபாகு போன்றவர்களும், பப்ரல் - கபே போன்ற அரச எதிர்ப்பு தேர்தல் கண்காணிப்பு குழுக்களும், அரசு இந்தத் தேர்தலை மோசடித்தனமாக நடாத்தப் போகின்றது என்று பெரும் பிரச்சாரம் செய்துவந்த போதிலும், பாராட்டும்படியாக தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்றுள்ளதை, முடிவுகள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், 1981ல் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த சக்திகள் பெரும் மோசடியில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாணத்தை (யாழ்.நூலகம்) உட்பட எரியூட்டினவோ, அதே ஐ.தே.க சக்திகள், தாம் செய்ததுபோல, தற்போதைய அரசும் செய்யப் போகிறது என பிரச்சாரம் மேற்கொண்டமைதான். ஆனால் எல்லாப் பொயப்பிரச்சாரங்களையும் முறியடித்து, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க, அரசு சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

இன்னொரு வகையில் சொல்லப்போனால், புலிகளினாலும் அவர்களது பினாமி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பாலும், கடந்த முப்பது வருடங்களாக வடபகுதி தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த அல்லது மோசடித்தனமாக தேர்தல் நடாத்திய நிலையை மாற்றி, மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்திருப்பதானது, மக்கள் தமது வாக்குரிமையின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் எவ்வளவு ஆர்வமாக இருந்துள்ளார்கள் என்பதை, இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது.

இந்த தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பெற்றுக்கொண்ட வாக்குகளை எடுத்துக்கொண்டால், வடக்கு மக்களில் மூன்றிலொரு பங்கினர், 1947ல் சுதந்திர இலங்கையின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற நாளிலிருந்து வெளிக்காட்டி வரும், பிற்போக்கு எதிர்ப்பு நிலைப்பாட்டை இத்தேர்தலிலும் மிக தெளிவாக வெளிக்காட்டியுள்ளனர். 1947 முதல் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலையும் எடுத்து ஆராய்ந்து பார்த்தால், வடபகுதி மக்களில் மூன்றிலொரு பகுதியினர், அந்தந்த காலகட்டங்களில் செல்வாக்குச் செலுத்திய தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பனவுக்கு எதிராகவே வாக்களித்து வந்துள்ளதை அவதானிக்க முடியும்.

அதுவும் புலிகள் வடக்கில் முழு அதிகாரத்தையும் வைத்திருந்து, கள்ள வாக்குகள் மூலம் 22 தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பிய சூழலில் கூட, மூன்றிலொரு பங்கு மக்கள் அவர்களுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக, ஒரு பாடசாலை மாணவன் மொத்த தான் எடுக்கவேண்டிய 100 புள்ளிகளில், மூன்றிலொரு பங்கு புள்ளிகள் எடுத்தால், அது எப்படி சாதாரண சித்தி பெறுவதற்கு போதுமானதோ, அதுபோன்றது தான் இதுவும். எனவே தமிழ் மக்களில் மூன்றிலொரு பங்கினர் எப்பொழுதும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை தாமாகவே சித்தியடைய வைத்து வந்துள்ளனர் என்று கொள்ளலாம். அதை மேலும் அதிகரித்து, முதல் கட்டமாக ஐம்பது வீதம் வாக்குகளை எடுப்பதை இலக்காகக் கொண்டு முன்னேறியிருக்க வேண்டியது முற்போக்கு ஜனநாயக சக்திகளின் கடமையாகும். ஆனால் கடந்த 30 வருடங்களாக புலி பாசிசவாதிகள் அந்த வாய்ப்பை வழங்காமல் தடுத்து வந்துள்ளனர்.

இருப்பினும், இந்த உள்ள+ராட்சி தேர்தலில், தமிழ் மக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மூன்றிலொன்றையும் தாண்டி, முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதாவது யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்ககள் 1,24,968 ஆகும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 47,067 ஆகும். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த வாக்குகளில், சுமார் 40 வீதத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எடுத்துள்ளது.

அதேபோல, கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த மொத்த வாக்குகள் 24,086 ஆகும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகள் 10,970 ஆகும். அங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எடுத்த வாக்குகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த வாக்குகளில் ஏறத்தாழ 45 வீதமாகும். இந்த வீதாசார வித்தியாசம், வழமையான மூன்றிலொரு வீதத்தைக் கடந்து 40 – 45 வீதம் வரை வளர்ச்சியடைந்திருப்பதானது, வடக்கு தமிழ் மக்களுக்கு, பிற்போக்கு இனவாத தமிழ் தேசிய கூட்டடமைப்பு மீது நம்பிக்கை குன்றி வருவதையே தெளிவுற எடுத்துக்காட்டுகிறது.

அதுவும், ஏகாதிபத்திய சக்திகள் இலங்கை அரசு மீது திட்டமிட்டு எதிர்ப்பிரசாரங்களை பெருமளவில் முடுக்கிவிட்டுள்ள ஒரு சூழலில், அதைப்பயன்படுத்தி புலம்பெயர் புலிகளும், தென்னிந்தியாவிலுள்ள தமிழினவாதிகளும் இலங்கைக்கு எதிராக விசம பிரசாங்களை செய்து வரும் சூழலிலும், களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே.க, ஜே.வி.பி போன்ற சிங்கள பிற்போக்கு இனவாத சக்திகளின் துணையுடனும், ஊடக மாபியாக்களின் உதவியுடனும் மக்களை இன வெறியூட்டியும், பொய்களை பரப்பியும வந்த சூழலிலும், முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஈட்டிய இந்த வெற்றி குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகும்.

விகிதாசார முறைமையைப் பயன்படுத்தி, அதிக சபைகளின் நிர்வாகத்தை கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தாலும், வெளியே தமது வெற்றி பற்றி கூட்டமைப்பு தலைமை எவ்வளவுதான் பெரிதாக பீற்றிக்கொண்டாலும், தமது சரிவையிட்டு உள்ள+ற கலக்கமடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

அதேவேளையில், இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்டுவது மிகவும் அவசியம். வடக்கு மக்களின் வாக்குகளை கவருவதற்காக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது மந்திரி பரிவாரங்களும், பல நாட்கள் வடக்கில் தங்கி நின்று பிரச்சாரம் செய்ததுடன், அவசரம் அவசரமாக பல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர். அவற்றால் பெரிய பிரயோசனம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூடுதலான அளவில் வாக்களித்தது, அந்த அரசியல் திருடர்கள் மீதான அன்பினாலோ அல்லது கருணையினாலோ அல்ல. அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையும் ஒரு பிரதான காரணம் என்பதை, அரச தலைமையும், இந்த தேர்தலில் பிரதான பங்கேற்ற ஈ.பி.டி.பி கட்சியும் உணர வேண்டும்.

என்னதான் அபிவிருத்தி வேலைகளை வடக்கு கிழக்கில் மேற்கொண்டாலும், அரச நிர்வாகத்தில் தமக்கு உரிய பங்கு வழங்கப்படவில்லை என தமிழ் மக்கள் நினைக்கும் வரைக்கும், அரசால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது. அதன் விளைவு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற பிற்போக்கு இனவாத சக்திகளுக்கு நிரந்தர அருங்கொடையாகவே இருந்து வரும். எனவே, அரசாங்கம் தனக்கு தமிழ் மக்கள் மத்தியில் இன்னொரு தேர்தல் தோல்வி ஏற்படும் வரை காத்திருக்காமல், மிக விரைவாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

தந்திரோபாய ரீதியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பல தவறுகளை இத்தேர்தலில் இழைத்துள்ளது. இந்த தேர்தலில் ஐக்கியப்படுத்தப்பட வேண்டிய இரு முக்கிய சக்திகளான இடதுசாரிகளும், ஈ.பி.ஆர்.எல்.எப் நாபா அணியும் சரியாக உள்வாங்கப்படவில்லை. உதாரணமாக, தமது பலவீனம் காரணமாக தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருந்த நாபா அணியினரை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அணியினர் கவனத்துக்கு எடுக்க தவறியிருந்த அதேவேளையில், தமிழரசு கட்சியினர் அமிர்தலிங்கத்தின நினைவு தினத்தை சாக்காக வைத்து, தாம் நடாத்திய நினைவு தினக் கூட்டத்தில், முன்னாள் வட கிழக்கு முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளை பேச வைத்ததின் மூலம், அந்த அணியினரும் தம்முடன்தான் என காட்டி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அந்த அணி ஆதரவாளர்களின் வாக்குகளையும் தந்திரமாக கவர்ந்து கொண்டனர்.

இனிமேலாவது இந்த அனுபவங்களிலிருந்து சரியான பாடங்களை கற்றுக்கொண்டு, தொடர்ந்து உறுதியுடன் வேலைசெய்து, தற்போது கிடைத்துள்ள வளர்ச்சி நிலையை மேலும் பெருக்கி, தமிழ் பிற்போக்கு இனவாத சக்திகளை தமிழ் மக்கள் தம்தயிலிருந்து முற்றுமுழுதாக துடைத்தெறிய முற்போக்கு ஜனநாயக சக்திகள் சபதமேற்க வேண்டும். ஐக்கியமும் விடாமுயற்சியும் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை என்பதை, அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் இந்த சந்தர்ப்பத்தில் விளங்கி கொள்வது அவசியம்.

எனவே, இந்த தேர்தல் முடிவுகள் ஒரு தோல்வியல்ல. வெற்றியின் ஆரம்பம் என்பதை நாம் தெளிவாக விளங்கி கொண்டு, ஊக்கமுடன் முன்னேறுவோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக