வியாழன், 7 ஜூலை, 2011

சோனியாவுடன் லாலு சந்திப்பு.. மீண்டும் அமைச்சராகிறார்?

டெல்லி: ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகலாம் என்று கூறப்படும் நிலையில், லாலு மற்றும் அஜீத் சிங் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க சோனியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விரைவில் நடக்கவுள்ள திமுக பொதுக் குழுக் கூட்டத்தில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இதனால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் அஜீத் சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் ஆகியவற்றை கூட்டணியில் சேர்த்த சோனியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தி்ல் அதிமுகவை உடனடியாக கூட்டணியில் சேர்க்கும் திட்டமில்லை என்றும் தெரிகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் தூரமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த லாலுவுக்கு இன்று சோனியா காந்தி தன்னை சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுத்தார். இதையடுத்து டெல்லி வந்த லாலு சோனியாவை சந்தித்துப் பேசினார்.
சந்திக்க அமைச்சரவையில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்திற்கு இடமளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருவரும் பிகார் நிலவரம் குறித்துப் பேசியதாகக் கூறினாலும், கூட்டணியில் மீண்டும் லாலுவை சேர்ப்பது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது ராஷ்ட்ரீய ஜனதாதளம் தான் அந்த கூட்டணியிலேயே இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது லாலுவை கழற்றிவிட்டது காங்கிரஸ். காரணம், பிகாரில் அந்தக் கட்சி அடைந்த படுதோல்வி. ஆனாலும் மக்களவையில் 4 எம்பிக்களையும் மாநிலங்களவையில் கூடுதலான எம்பிக்களையும் கொண்டுள்ள லாலு காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் மத்திய அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்ற சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந் நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பிரச்சனைகளை எழுப்ப பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவுடன் சுமூக உறவு இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நெருக்குதலை சமாளிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதற்காக தனது பலத்தை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் லாலு மற்றும் அஜீத் சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் ஆகிய 2 கட்சிகளை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு எதிர்க் கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பிகாரில் செல்வாக்கு சரிந்துவிட்ட லாலுவுக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தால் அது அரசியல் மறுவாழ்வு கிடைத்தது போலாகும்.
அஜீத் சிங்கைப் பொறுத்தவரை அவரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால், அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் அவரது ஆதரவும் காங்கிரசுக்கு பெரும் பலன் தரும்.

எனவே மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்போது லாலு மற்றும் அஜீத் சிங் அல்லது அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் சோனியா இடம் தருவார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக