வியாழன், 7 ஜூலை, 2011

தி.மு.க.தான் எதிர்க்கட்சி: திருமாவளவன்

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா 07.07.2011 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
சமச்சீர் கல்வி பற்றிய நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்பதற்காக பல குறைகளை கூறி அரசு தள்ளி வைக்கிறது. சமச்சீர் கல்வியை முற்றிலும் புறக்கணிக்கிறது. பெருந்தன்மையுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலவச கல்வி, மதுக்கடைகளை மூடுதல், மணல் அள்ளுவது தடுத்தல் போன்ற பிரதான பிரச்சினைகளை மையமாக வைத்து மக்கள் இயக்கம் நடத்த உள்ளோம்.

தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் முறை கொண்டு வர வேண்டும். அதாவது ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விகித அடிப்படையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் தி.மு.க. சுமார் 1 கோடி ஓட்டுகளை பெற்றும் கூட எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

தே.மு.தி.க. சுமார் 25 லட்சம் ஓட்டுகள் பெற்று எதிர்க்கட்சியாகி உள்ளது. இதற்கு காரணம் தேர்தல் நடைமுறையில் உள்ள குளறுபடிதான். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இருந்திருந்தால் தி.மு.க. தான் எதிர்க்கட்சி என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக