திங்கள், 11 ஜூலை, 2011

சினிமாவுக்குச் சமமாக நாடகம்!விருமாண்டி, அந்நியன், எம்மகன், சிவாஜி

நாடகத்திலும், சினிமாவிலும் ஒரே நேரத்தில் நடித்துப் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு நம் தமிழகத்தில் பஞ்சமில்லை. ஆரம்பகால தமிழ் நடிகர்கள் எம்.கே.தியாகராஜபாகவதர், சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா போன்றவர்கள் இதற்கு உதாரணம். அந்த மரபு இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  விருமாண்டி, அந்நியன், எம்மகன், சிவாஜி உட்பட 56 திரைப்படங்களில் நடித்த நடிகர் சண்முகராஜா தனது உயிரென மதிப்பது நாடகத்தை.மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் கன்யாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்றது. அங்கே சண்முகராஜா இயக்கிய "குதிரை முட்டை' நாடகம் நிகழ்த்தப்பட்டது. மதுரையில் "நிகழ் நாடக மய்யம்' என்ற பெயரில் பல்வேறு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் சண்முகராஜா.  சினிமாவைவிட நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று அவரிடம் கேட்டோம்.  ""நான் தமிழ் இலக்கியத்தில் எம்.ஃபில் படித்துவிட்டு, புதுதில்லி தேசிய நாடகப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பை முடித்தேன். சினிமாவில் நடித்தாலும் நாடகம் எனது மூச்சாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது.  தில்லியில் படிப்பை முடித்த பிறகு மதுரைக்கு வந்து நிகழ் நாடக மய்யத்தை 2002 இல் உருவாக்கிச் செயல்பட்டு வருகிறேன். நாடகக் கலையை மக்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சென்று அவர்களுடைய நலனுக்காகப் பாடுபட வேண்டும் என்பதுதான் என் நோக்கம். உதாரணமாக "தொட்டா புடி சாமி' என்ற நாடகத்தைச் சொல்லலாம். இந்த நாடகம் குடிநோயைப் பற்றியது. குடிநோயின் கொடுமையைப் பற்றியும் அதிலிருந்து ஏன் மீள வேண்டும் என்பது பற்றியும் வலியுறுத்திச் சொல்கிறது. இதை தமிழ்நாட்டின் பல ஊர்களில் நடத்தினோம்.  கிராமங்களில் இந்த நாடகத்தைப் பார்த்த மக்கள் போதை நோயிலிருந்து தாங்கள் மீள விரும்புவதாகவும், அதற்குச் சிகிச்சை பெற விரும்புவதாகவும் தெரிவித்தனர். இப்படி 1800 பேருக்கும் மேல் போதை நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்'' என்கிறார் மகிழ்ச்சியுடன். இதுபோல மனநலம் தொடர்பான "இனி', சுகாதாரம் தொடர்பான "அக்கம்பக்கம்', மாற்றுக் கல்வியைப் பற்றிய "திருப்பிக் கொடு' ஆகிய நாடகங்களை சண்முகராஜா நடத்தி வருகிறார்.  அவருடைய நிகழ் நாடக மய்யத்தில் முழுநேர நாடகக் குழு செயல்பட்டு வருகிறது. நடிப்புக்காகவும், நாடகத் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்காகவும் இங்கு பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.  ""எனது நாடகங்களில் பெரும்பாலானவை வீதி நாடகங்கள். எந்தவித ஒப்பனையும் இல்லாமல், மேடை இல்லாமல் உடல் மொழியைப் பிரதானமாக வைத்து நாடகங்களை நடத்தி வருகிறேன். அதேசமயம் மேடை நாடகங்களையும் இயக்கி வருகிறேன்.  வீரமாமுனிவரின் பரமார்த்த குருகதையில் வருகின்ற நிகழ்வுகளை மூலமாக வைத்து நான் இயக்கிய "குதிரை முட்டை' இதுவரை 42 தடவை சர்வதேச நாடகவிழாக்களில் பங்குபெற்றிருக்கிறது. இதுபோல பிரெஞ்ச் நாடக ஆசிரியர் பெர்ட்டோல்ட் பிரெக்ட்டின் நாடகத்தை மூலமாகக் கொண்ட "பொறுக்கி', மோலியரின் நாடகத்தை மூலமாகக் கொண்ட "மனைவியர் பள்ளி' போன்ற நாடகங்கள் முக்கியமானவை. முழுநேர நாடகக் குழு மட்டும் அல்லாமல் பகுதி நேர நாடகக் குழுவையும் நடத்தி வருகிறேன்'' என்ற அவரிடம், பகுதி நேர நாடகக் குழுக்களில் யார் பங்கு பெறுகிறார்கள்? என்று கேட்டோம்.  ""பகுதி நேர நாடகக் குழுவில் 20 குழந்தைகள் பங்கேற்கிறார்கள். ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் உள்ள குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து நடிக்க வைக்கிறேன்.  எங்கள் நாடகங்களைப் பள்ளி, கல்லூரிகளில் நிகழ்த்தியிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடத் தமிழர்கள் முகாம்களிலும் எங்கள் நாடகத்தை நடத்தியிருக்கிறோம். மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சினிமாவுக்குச் சமமாக நாடகம் அங்கே இருக்கிறது. தமிழகத்திலும் அப்படிப்பட்ட நிலை உருவாக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் உறுதியுடன்.  ந.ஜீவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக