சனி, 30 ஜூலை, 2011

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு நாளை பயிற்சிப் பட்டறை

வடமாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் ஊடகப் பயிற்சிப் பட்டறை நாளை (30) சனிக்கிழமை கொக்காவில் சிறிலங்கா சிக்னல் படைப்பிரிவின் கம்பியூட்டர் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா மன்னார் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள ஊடகவியலாளர்களுக்காக அசி திசி வினிச என்ற பெயரில் தகவல் ஊடகத்துறை அமைச்சினால் நடத்தப்படுகின்றது.

ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பி. கணேகல மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வார்கள்.

மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 ஊடகவியலாளர்கள் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுவார்கள்.

சிரேஸ்ட ஊடகவியலாளர்களான மொஹான் சமரநாயக்க (இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவர்) எஸ். தில்லைநாதன் (தினகரன் பிரதம ஆசிரியர்) எம். எஸ். எம். ஐயுப் கச்சி முஹம்மது மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி ஆகியோர் இப்பயிற்சிப் பட்டறையில் விரிவுரை வழங்கவுள்ளனர்.

மாகாண ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களையும் அனுபவங்களையும் மூத்த ஊடகவியலாளர்கள் ஊடக மற்றும் தகவல் அமைச்சு அதிகாரிகள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்த ஊடகப் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற விடயம் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துரையாடப்படும்.

வடபகுதியில் உள்ள மாகாண ஊடகவியலாளர்களுக்கு ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் ஊடக உபகரணங்களையும் பயிற்சி நெறிகளைப் பின்பற்றவும் சலுகைக் கடன் வசதிகளை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அத்துடன் தற்போது வட பகுதியில் இடம்பெற்று வரும் துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றிய சரியான மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்படும்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான அடுத்த பயிற்சிப்பட்டறையை விரைவில் நடத்துவதற்கு அமைச்சு திட்டமிட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக