வியாழன், 21 ஜூலை, 2011

சித்ரவதை செய்கின்றனர் : சக்சேனா உருக்கம்!பொய் புகார் அளிக்கும் படி என்னை


சென்னை: மாஜிஸ்திரேட்டுக்கு, சக்சேனா எழுதியுள்ள கடிதத்தில், ‘கலாநிதி மாறன் மீது பொய் புகார் அளிக்கும் படி என்னை சித்ரவதை செய் கின்றனர். அதற்கு உடன்பட மறுப்பதால் என்னை போலீஸ் காவலில் எடுத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்’ என்று கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனா மீது சென்னை போலீஸ் அடுத்தடுத்து பல  வழக்குகளை போட்டு வருகிறது. நீதிமன்றம் ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கினால் இன்னொரு வழக்கில் சிறையில் அடைக்க வசதியாக இந்த அனுகுமுறை கையாளப்படுகிறது. அவற்றில் ஒரு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சக்சேனா ஆஜர் செய்யப்பட்டார்.

சக்சேனாவை மீண்டும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். சக்சேனா தரப்பில் கே.எஸ்.தினகரன், பாட்ஷா ஆகியோர் ஆஜராகினர். ‘திரைப்பட வினியோகம் மற்றும் விற்பனை என்பது முற்றிலும் வர்த்தக பரிவர்த்தனை. அதில் கிரிமினல் குற்றத்துக்கே இடமில்லை. செல்போனில் அசிங்கமாக பேசி மிரட்டியதாக புகார் கூறுபவர்கள் என்ன பேசினார் என்பதை தெரிவிக்கவில்லை. மிரட்டப்பட்டதாக கூறும் நிகழ்ச்சிக்கு பின்னர் பல மாதங்கள் கழித்து புகார் கொடுத்துள்ளனர். அதனால், சக்சேனாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’ என தினகரன் வாதிட்டார். எனினும், சக்சேனா, அய்யப்பன் ஆகியோரை 27மணி நேரம் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். முன்னதாக, போலீஸ் காவலில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சம் தெரிவித்தும், உயிருக்கு பாதுகாப்பு கோரியும் மாஜிஸ்திரேட்டிடம் சக்சேனா ஒரு கடிதம் அளித்தார்.

நான் சொன்னதாக பத்திரிகைகள் மூலம் போலீசார் பொய் பிரசாரம்!

சக்சேனா எழுதியுள்ள கடிதத்தின் சில பகுதிகள்: நான் போலீசிடம் சொன்னதாக கதைகளை இட்டுக்கட்டி அதை பத்திரிகைகள் மூலம் வெளியிட வைக்கிறார்கள். நான் போலீசிடம் சொன்னதாக பத்திரிகைகளில் வெளியான அனைத்தும் பொய். அவ்வாறு நான் எதுவும் கூறவில்லை. போலீசார் அவ்வாறு பொய் பிரசாரம் செய்கிறார்கள். தலையணை, படுக்கை இல்லாமல் தரையில் படுக்க கட்டாயப்படுத்துகின்றனர். அதிகாலை 3 மணி வரை தூங்க விடாமல் தொல்லைபடுத்துகின்றனர். தூங்கியதும் 4 மணிக்கு எழுப்பி விடுகிறார்கள். போலீஸ் காவலில் நான் பெரும் சித்ரவதை அனுபவிக்கிறேன். ஒரு பொய்யான வழக்கில் நான் ஜாமீன் பெற்றால் உடனே புதிய பொய்யான வழக்கு போடுகின்றனர். போலீஸ் காவலுக்கு என்னை அனுப்பினால்
உயிருக்கு ஆபத்து நேரும் என அஞ்சுகிறேன். எனவே நீதிமன்றம் தலையிட்டு என்னை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிந்துபாத் கதை மாதிரி வழக்கு போட்டு கொண்டே இருக்கிறீர்கள் இதுதான் போலீசாருக்கு வேலையா?-போலீசாருக்கு மாஜிஸ்திரேட் கண்டனம்

வல்லக்கோட்டை படம் தொடர்பான புகாரில் சக்சேனாவை கைது செய்த போலீஸ், அதில் அய்யப்பனையும் கைது செய்ய நீதிமன்ற அனுமதி கேட்டனர். அதற்கான கோப்பை அரசு வக்கீலிடம் பெற்றுக் கொண்ட நீதிபதி, ‘சிந்துபாத் கதை மாதிரி வழக்கு போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். இதுதான் போலீசாருக்கு வேலையா? நீதிமன்றத்துக்கு எவ்வளவு வேலைகள் இருக்கிறது, தெரியுமா?’ என்று போலீஸ் தரப்பை கண்டித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக