புதன், 27 ஜூலை, 2011

கொழும்பு உள்ளூராட்சி தேர்தல்களுக்கு தயாராகுங்கள் : மனோ கணேசன்!

கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவ நகரசபை ஆகிய உள்ளூராட்சி சபைகள் உள்ளிட்ட எஞ்சியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான மூன்றாம்கட்ட தேர்தல்கள் வெகுவிரைவில் நடத்தப்படவுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் நடைபெறக்கூடிய தேர்தல்களில் தோழமை கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்குவதற்கு நமது கட்சியின் அரசியற்குழு முடிவுசெய்துள்ளது.

எனவே தேர்தல்களில் வெற்றிகளை குவித்து, கொழும்பு மாவட்டம் எமது கோட்டை என்பதை நிரூபிப்பதற்கு கட்சியின் அங்கத்தவர்களும், ஆதரவாளர்களும் தயாராகவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, கொழும்பு மாவட்டத்திலே தமிழ் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும். அதேவேளையில் சகோதர இனத்தவர்களுடனான எங்களது உறவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவே கொழும்பு மாவட்டத்திலும், குறிப்பாக கொழும்பு மாநகரத்திலும் நிலவுகின்ற அரசியல் யதார்த்தமாகும். எனவே எமது கட்சியின் தலைமையில் தோழமைகள் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணியாக நமது அணி களமிறங்கும்.
வாக்குரிமையுள்ள அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களையும் வாக்களிப்பில் கலந்துகொள்ள வைப்பதற்காக நாம் இப்போதே மக்கள் மத்தியில் சென்று செயற்படவேண்டும். வாக்களிக்கும் ஒவ்வொரு தமிழரும் தங்கள் வாக்குகளை எமது ஏணி சின்னத்திற்கு வழங்கவேண்டியதற்கான காரணங்களை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
தேசியக் கட்சிகள் அனைத்தும் பெரும்பான்மையினரின் நலன்களை முன்னிறுத்திய தமது அரசியலை முன்னெடுக்கின்றன. தமிழ் பேசும் மக்களை தங்களது வாக்குவங்கிகளாக மாத்திரமே கணிக்கின்றன. இத்தகைய சிந்தனை கடந்த காலங்களைவிட தற்போது தேசியக் கட்சிகள் மத்தியிலேயே அதிகரித்துள்ளது. இந்நிலையில் எமது தனித்துவத்தையும், சகோதர இனத்தவர்களுடனான நியாயமான உறவுகளையும் முன்னெடுக்கும் முகமாக நாம் செயலாற்ற வேண்டியது வரலாற்றுத் தேவையாகும். இந்த அடிப்படை கருத்தை மக்கள் மத்தியிலேயே நமது கட்சியினர் கொண்டு செல்லவேண்டும்.
ஏற்கனவே பல மக்கள் சந்திப்புகள் வடகொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய சந்திப்புகள் இன்னும் நூற்றுக்கணக்கில் கொழும்பு, தெகிவளை-கல்கிசை, கொலொன்னாவை ஆகிய பகுதிகளில் நடத்தப்படவேண்டும். இவற்றுக்கான ஏற்பாடுகளை எமது பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் அவர்களும், தேசிய அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன் அவர்களும் செய்து வருகின்றார்கள். இதுதொடர்பில் வட்டார அமைப்பாளர்களுக்கான கொழும்பு மாவட்ட மத்தியக்குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக