புதன், 27 ஜூலை, 2011

ஆபாசம் - வன்முறை படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது: தமிழக அரசு அதிரடி


தமிழிலேயே பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்த முந்தைய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆபாசப் படங்கள், வன்முறைப் படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
திரைப்படத்தில் வன்முறை, ஆபாசம் இருந்தால் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு கிடையாது உள்ளிட்ட 4 புதிய நிபந்தனைகளை விதித்து தமிழக அரசு இன்று ஆணை பிறப்பித்தது.

கேளிக்கை வரிச்சலுகை பெற திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், கீழ்க்காணும் கூடுதல் தகுதி வரையறைகளை நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அந்தக் கூடுதல் தகுதிகள். அவ்வாறான திரைப்படம்,

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து "யூ" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. திரைப்படத்தின் கதையின் கருவானது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்.

3. திரைப்படத்தின் தேவையை கருதி பிறமொழிகளை பயன்படுத்தும் காட்சிகளைத் தவிர பெருமளவில் திரைப்படத்தின் வசனங்கள் தமிழ் மொழியில் இருத்தல் வேண்டும்.

4. திரைப்படத்தில் வன்முறை மற்றும் ஆபாசங்கள் அதிக அளவில் இடம் பெறுமேயானால் அத்திரைப்படம் வரிவிலக்கு பெறப்படுவதற்கான தகுதியை இழக்கும்.

மேற்கண்ட வரையறைகள், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு கோரப்பட்டு தற்போது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.

மேலும் கேளிக்கை வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்கின்ற திரைப்படங்களை பார்வையிட்டு வரிவிலக்கிற்கு பரிந்துரை செய்ய ஒரு புதிய தனிக்குழு ஏற்படுத்தப்படும். அவ்வாறான புதிய குழு அமைப்பதற்கான ஆணை தனியே வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக